வெள்ளி, 16 ஜூன், 2017

கடவுளும் கம்பியூட்டர்ஜியும்


கடவுளும் கம்பியூட்டர்ஜியும்
=======================================================ருத்ரா

சன்னலை ஊடுருவிப்பார்க்கிறாய்.
தூரத்துப்புள்ளியில்
ஒரு புள்ளின் துடிப்பு.
வானக்கடலில் சிறகுத்துரும்பு.
கனவு அப்படித்தான் சிறகடிக்கிறது.
அதற்கு காலம் சட்டை மாட்டுவதில்லை.
நினவு
ரத்த சதையை கழற்றிய நிர்வாணம் அது.
சித்தர்கள்
உள்ளத்தையே குகையாய் செதுக்கி
குடியிருந்தார்களாம்.
அதில் வெளிச்சம் தெரியும்போது
அவர்களே புத்தர்கள்.
சாதாரண மனிதனுக்கு
தனி முயற்சிகள் தேவையில்லை.
அவனது கவலைகள் ஆசைகள்
பொறாமையில் சுரக்கும்
அட்ரீனலின் அமில ஊற்றுகள்...
இவை போதும்.
குகை வெட்டும்.பகை மூளும்.
குழி வெட்டும்.
அவனது நாட்கள் எல்லாம்
மண் மூடி மக்கிப்போகும்.
அவன் கண்களில் மட்டும் ஊழித்தீ.
ஒருவன் இன்னொருவனை
ஆகுதியாக்கி எரிக்கும் வேள்வித்தீ.
தான் மட்டுமே
தசை தடித்து நரம்பு புடைத்து
தன்னையே கூட தின்கின்ற வெறியோடு
வேட்டையாடும் கொடூரம்.
டிவி செல்ஃபோன்
எப்படி சொல்லிக்கொண்டாலும்
மின்னணுக்காட்டில்
ஒரு காட்டுத்தீ வளர்த்துக்கொண்டு
தன் சாம்பல் தேடுகின்றான்.
கடவுளைக்கூப்பிட‌
கூச்சல் போட்டு
கூளங்களை கொட்டும் இடம்
கோவில்களே.
பேராசைகள் பால் குடங்களின்
அருவி ஆகிறது.
எங்கோ ஒரு
எத்தியோப்பிய மூலை என்றாலும் சரி
நம் வீட்டுஅருகே
ஏதோ ஒரு மண் குடிசை என்றாலும் சரி
அங்கே ஒரு துளிப்பாலுக்கு வழியின்றி
மனித சிசுக்கள் மண்ணுக்குள்
புதைக்கப்பட்டு
புழுக்களாகி விடுகின்றன!
அந்த
பால்குடங்கள் அத்தனையும்
பாவக்குட ங்கள்!
அந்த தாயின் சப்பிய முலைக்கூடுகளில்
பால் சுரக்க
அவள் வயிற்றுக்கு  சோறிடாத
பாவக்காடுகள் பகவான் தலையில்
பால் சொரிகின்றன.
குரோதங்களைக் கூட‌ கடவுள் செவிகளில்
கொட்டிக்கவிழ்த்து
அர்ச்சனைகள் ஆயிரம் ஆயிரம் அங்கே !
மும்மலத்தையும்
தன்னுள் வைத்துக்கொண்டு
மலம் அள்ளும் மனிதனை
தள்ளி வைத்து
தங்க ரதங்கள் இழுக்கிறான்
கோவில்களில் !
அது வடம் அல்ல.
ஒரு நரசிங்கம் இந்த கயமைப்பக்தியின்
மார்பு பிளந்து போட்ட குடல் அது.
ரத்தம் சொட்ட சொட்டவா
பக்தி ரசம் சொட்டவேண்டும்?
வக்கிரங்களால்
முறிந்து சிதைந்து போன‌
தன் மன நலம் தேடும்
வழி இழந்து போய்
அங்கு இறந்து நிற்கின்றான்
அந்த பக்தன்.
பக்தி அவனை
விறைத்துப்போன சடல அறைகளுக்குள்
தள்ளி விட்டு விடுகிறது.
குப்பைகளை கொட்டிக்கவிழ்த்து
தினம் தினம் கும்பாபிஷேகம்.
யார் யாரை தேடுவது?
மனிதன் கடவுளையா?
கடவுள் மனிதனையா?
ஈசல்களின் ஈசாவாஸ்யங்களில்
டாலர்கள் மட்டுமே எச்சில் வடிக்கின்றன.
உள்ளூர் "உண்டியல்களும்" கூட இங்கு
உலகப்பொருளாதாரம் தான்.
அந்தக்கணினிகளின்
விசைப்பலகையைச் சுற்றி
விட்டில்களின்
இறகுக்குவியல்கள்.
கௌன் குரோர்பதி பனேகா?
கம்பியூட்டர்ஜி
விடை சொல்லுங்கள்.
தினந்தோறும் இங்கு
வண்ண வண்ண ஓளிப்பாய்ச்சல்களோடு
சமுதாய ஓர்மை செத்த கரங்கள்
தட்டி தட்டி கரகோஷம் எழுப்ப‌
பட்டன்கள் தட்டப்படுகின்றன.
அவர்களின்
பயணம் தொலைந்து போகும் இடங்கள்
இந்த "தொலை"க்காட்சிகள் தான்.

======================================================
23/11/2014

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக