அகழ்நானூறு 107
_______________________________________
ஊரிடை செம்பின் வெம்புழுதி பூப்பினும்
எஃகம் இலையிய செருவந்து ஆர்த்த
செங்குருதி யாற ஊழ் செறித்து கிடப்பினும்
களிறும் பிடியும் கடிமனை முறுக்கினும்
"நிரல் அல்லோருக்கு தரல் இல்"என
கொல்மறம் காட்டி கொலை அறம் கூட்டி
வீதி தோறும் மலிஉடல் குவீஇய்
வேலும் வாளும் நீடு நீடு தோற்றி
நிணம் பெய் பேஎய் ஆறு கூஇய்
அழியினும் ஆலுவர் மாணவே ஒலித்து.
தம் தங்கையின் அங்கை கவரத்தாரார்
கூர் மதி பிளந்து உள்ளுவர் ஆயின்
தங்கை உள் உள் கனலும் காதல்
வேலெறி மன்னன் குறுநிலத்து ஆயினும்
விழியெறி அணியிழை குவளைச்சிறையுள்
பட்டனன் வேட்டனன் அவள் பூண் நகையே.
மெய்மை தோற்ற பொய்வெறிப்போரின்
மண்புக்கு மடிந்த மணிநிறைக் காதல்
பாடுக பாண! மீட்டுக யாழ்ண!
"அடைநெடுங்கல்வியார்க்கு" அடுத்தூர ஏதுமிலை.
எதற்கு காதலாகி கசியுமுன் இக்குருதிமழை?
இகல் தொடுக்கும் இரும்புவேல்கள் எதற்கிங்கே?
என்றாங்கே யாத்து நின்றார் அவ்வாற்றுப்படை.
கழாஅத்தலையர் கருங்கடை நெடுவேல்
மூசிய புல்லூர் முறுவல் தேற்றா
பாழ்நகர் அன்ன வீழ்தல் ஒல்லுமோ
பளிங்கின் ஒளிமழை நிலாமுற்றத்துக்
கல்லெனப்படுமோ பூங்கால் வருடலும்
இல்லெனப்படுமோ கூர்மதி ஓர்வாய்.
___________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக