வெள்ளி, 5 டிசம்பர், 2025

ஒரு வினோதப் பதற்றம்.

 

இறந்து போய்விடுவேன் என்று
இன்று ஒரு வினோதப் பதற்றம்.
வாசித்து வந்த புத்தகத்தில்
கடைசிப் பக்கங்கள்
எப்படி வெள்ளையாகிவிட்டன?
நெளிவு கூடிய கூந்தலின் ஒற்றை மயிரிழையை
யார் நூல் - அடையாளமாக வைத்துப் போயிருக்கிறார்கள்?



புள் நிமித்தம் தீ நிமித்தம் என்று இயற்கை ஒரு புத்தகம் எழுதுவதாய் சங்கத்தமிழ் கூறுகிறது. பல்லி தலையில் விழுவது காக்கை நம் தலையை இடறிக்கொண்டு பறப்பது இவையும் குறியீடுகள் தான். ஆனாலும் அவை உண்மைகளை பிம்பம் காட்டுவதில்லை. எல்லாம் "புதல் மறைந்து வேட்டுவன்
புள் சிமிழ்த்தாற்" போல் தான். எதற்கு தோற்றத்துக்கு ஒன்று. மறைவதற்கு ஒன்று என்று உருவெளி "பீலாக்கள்"? கௌடபாதர் சொல்லிவிட்டார் அஸ்பர்ஸ யோகம் செய் என்று. மனதாலும் தொடாதே. சிந்தனையாலும் உன்னை ஆபாசப்படுத்திக்கொள்ளாதே.. இப்படி எல்லாவற்றையும் மறுத்து ..மறைத்து ஒரு கவிதைக்குள் ஒளிந்து கொள். எழுத்துக்களின் தேமாங்காய் புளிமாங்காய் கணக்குகளில் மரணத்தின் மசக்கையை கூட‌ சுவைக்கலாம். வண்ணதாசன் அவர்களே அந்த "வெள்ளைத்தாள்"சகாராவைக் கடப்பதற்கு எத்தனை ஓட்டகங்கள் வேண்டும் இங்கே? __________________________________________ சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக