த மு எ க ச
____________________________
எழுத்து என்றாலே
எழுந்து இயங்கு
என்பது தானே.
சாய்வு நாற்காலியில்
சாய்ந்து கொண்டு
கடவுள் எனும் அச்சத்தை
ஆற்றாமையை
சவைத்துக்கொண்டிரு
என்றா பொருள்?
எங்கோ
எப்போதோ
நடந்தாலும் சரி
அந்த அநீதி
அந்த அக்கிரமத்தை
அடித்து நொறுக்கத்தான்
பேனாவும் காகிதமும்
நரம்பு முறுக்கிக்கொள்ள வேண்டும்.
கீழ வெண்மணியை
ஒவ்வொரு தடவையும்
தீக்குச்சி கிழித்து
நம் இருட்டின் வயிற்றைக்கிழித்து
நமக்கு நாமே
பிரசவம் பார்த்துக்கொள்ளும்
வரலாற்றுக்கடமையே
த மு எ க ச.
மனிதன் வாழ்க்கை
கரடு முரடுகளின்
முரண்பாட்டுச்சித்திரங்கள் தான்.
கனவு ரோஜாக்கள் கூழாவதில்
நம் விடியல் வானங்கள்
கசக்கி எறியப்பட விடலாமா?
சமுதாயம் கிழிந்து வடியும்
அவலங்களாய் இத்தனை
நூற்றாண்டுகளும் பறி போனதே.
உழைப்பும் வேர்வையுமே
நம் உயிர் மெய் எழுத்துக்கள்.
இதை எழுத நமக்கு வேண்டும்
துடிக்கும் ரத்தங்கள்.
__________________________________________
செங்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக