வெள்ளி, 5 டிசம்பர், 2025

அகழ்நானூறு 110

 


அகழ்நானூறு 110

________________________________________


முது பெருங்குன்று ஒரு பால் ஆண்டு

அணிலாடு முன்றில் ஆனது கண்டாள்

இரவின் குறி வேங்கைக்குறி மற்று

புள்ளி நீழல் நெடுமரக்குறியும்

கண்டனள் கலந்து களித்தனள் அவனை

யாண்டு நறுவீ அலர் மழை தூற்றாநின்று

நோதக்க வெந்நோய் வெரூஉ இகந்து 

இன்பூக் கஞல இரும்பூது ஆற்றும்.

திங்கள் வெண்குடை கவிக்கும் வெற்பன்

திமிறிய ஊற்றின் சிந்தனை ஊச்சும்

ஆழ்நிலை உறக்கம் அன்ன சாக்காடு

காட்டிய படுத்தல் படுக்கைப் பாயல்

திருத்தக்க தேவன் அருணம் ஓப்ப‌

கொழுநிழல் படிற்றே கோதை செயிர்த்தாள்

கொழுநன் தன்னுடன் வெட்புடன் கூடிய‌

தருணம் வேர்த்தாள் தழல் குமிழ்த்த‌

தண்ணிய காதலும் குழைத்தே.

___________________________________________

சொற்கீரன்

(சமணப்பெருவெளியில் தமிழ்ப்பெருவெளியும் இழைந்த ஒரு

கற்பனையில் நான் எழுதிய சங்கநடைச் செய்யுட்கவிதை இது.

"அகழ்நானூறு" எனும் என் தொகுப்பின் 110 வது செய்யுட்கவிதை இது.

தாங்கள் காட்டிய "பெருங்குன்றம்" பற்றி நின்று யாத்த கவிதை இது.)


"சமணப் பெருங்குன்றம்"
பெருங்குன்றம் -> பரங்குன்றம் -> திருப்பரங்குன்றம் -> இதுதான் அம்மலையின் சுருக்கமான வரலாறு. வட, தென் தமிழகப் பகுதிகளில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு தொடங்கி, கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்குள் எழுபதுக்கும் மேற்பட்ட சமண மலைப் பள்ளிகள் இயங்கி வந்தன. அதில் ஒன்றுதான் பரங்குன்றம் என்கிற பெருங்குன்றம்.
பக்தி இலக்கியக் காலம், இலக்கியத்திற்கும், தமிழிசைக்கும் ஏற்றம் கொடுத்தாலும் சமயச் சண்டைகள் ஏற்படவும், சமூகத்தை அச்சுறுத்தவும் ஏதுவானது. கி.பி. ஏழாம் நூற்றாண்டு தொடங்கி சமய நெருக்குதலுக்கு உள்ளாகி வந்த சமணம், கூன் பாண்டிய மன்னன் காலத்தில் பெரும் அடக்குமுறைக்கு உள்ளானது. அதில் தலையானது கழுவேற்றம். எண்ணாயிரம் கழுவேற்றங்கள். சமணர்கள் ஓடி ஒளியும் நிலை ஏற்பட்டது. அரச, சமய பயங்கரவாதத்திற்கு ஆளாகிய மக்கள், சமண பௌத்த சமயங்களைக் கைவிடும் நிலை நேரிட்டது.
சமணத் தீர்த்தங்கரர்களின் சிற்பங்களும், தமிழிக் கல்வெட்டுகளும் நிரம்பியிருந்த சமணப் பள்ளி மலைகளில் கழுகுகளும், காட்டுப்பன்றிகளும் திரியத் தொடங்கின. இன்றளவும் சமணச் சிற்பங்கள், கல்வெட்டு்கள், சரியான முறையில் பாதுகாப்பு இல்லாத நிலையிலும், அழியாமல் உள்ளன.
இன்றும் சமணர்கள் இருக்கின்றனர். திருப்பரங்குன்றம் கலவரங்களையும், அறமன்றப் பயங்கர வாதங்களையும் கண்டு கண்ணீர் சொரிந்து நிற்கின்றனர். அவர்களோடு, திருப்பரங்குன்றம் மலையடிவாரப் பழனியாண்டவர் கோவில் பின்புறச் சுனையில் உள்ள தீர்த்தங்கரர் சிற்பங்களும், வட்டெழுத்துக் கல்வெட்டுகளும், மலையுச்சி சுனையின் மேல் உள்ள தீர்த்தங்கரர் உருவங்கள், தமிழிக் (தமிழ் பிராமி) கல்வெட்டுகள் இவையெல்லாமும் வாய் மூடி மௌனமாகவே இருக்கின்றன.......!
முனைவர் சிவ இளங்கோ, புதுச்சேரி.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக