தேவகுமாரனுக்கு
கால் பதிக்க
ஒரு மாட்டுக்கொட்டில்.
அவன் வசனங்களை
உயிர்ப்பிக்க மனித ஆடுகள்.
மனிதனும் மனிதனும்
உராய்ந்து கொள்வதில்
அன்பெனும்
பனிப்பூக்களை அன்றி வேறு
வெறுப்பு பூசிய குருதிப்பூக்கள்
உதிர்வதே தேவகுற்றம்
என்று
சிலுவையில் ஆணி அடிக்கப்பட்ட போதும்
ஆணித்தரமாக
அந்த தேவகுமாரன் முழங்கியதே
கோவில் மணியோசையாய்
பிறந்து ஒலிவட்டங்களில்
வெளிச்சம் காட்டியது.
ஆயுதங்கள் காட்டும் கடவுள்கள் கூட
வெட்கித் தலை கவிழ்த்தன.
மனிதம் மலர்ந்தது.
மதங்கள் சருகுகளாய்
சர சரத்துக்கிடந்தன.
மதங்களாய் "ஏற்பாடு" செய்து கொண்டவர்கள்
சைத்தான்களின் சல சலப்புகளில்
இன்னும் ஒலியெழுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
தேவ குமாரனே!
உன் பிம்பமே இங்கு மனித குமாரர்களாய்
அன்பையும் அறிவையும்
ஏந்தி வலம் வருகின்றது.
மனிதனின் மீட்சி மனிதனின் மனதில்
மட்டுமே
என்று
உன் வசனத்துள் வசனமாய்
ஒரு குரல்
வானம் விம்ம ஒலிக்கின்றது.
_______________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக