சில சொற்களுக்கு
உடல்நலம் இல்லை!அகராதி
கவலையால்
உறங்கவில்லை!
மருந்துப் பெயர்களில் பற்பல
மூப்படைந்து
காலக்கெடுவைத் தாண்டிஅங்கங்குப்
பக்கங்களில் படுத்துக்கொண்டிருந்தன
எந்த ஊரிலும்
நோய்வாய்ப்பட்ட சொற்களுக்கென்று
மருத்துவநிலையங்கள் இல்லையே!
அகராதி "கூகுலுக்குள்ளும்"
தேடிப்பார்த்தது.பயனில்லை.
உடம்பு நடுங்கும்
ஒரு சொல்லுக்குப்பேகனிடம்கேட்டு அகராதி ஒரு
போர்வை வாங்கி வந்தது.
ஒருசொல்
விடாமல்காய்ச்சலோடு
இருமிக்கொண்டிருந்தது
அகராதியின்
மார்புக் கூட்டில் கலவரம் புகுந்தது
முல்லைக் கொடியிடம்
கெஞ்சிக்கேட்டுப்பாரி தேரை வாங்கிக்கொண்ட
அகராதி
துணைக்கு இரண்டொருசொல்லை
அழைத்துக்கொண்டு
சங்கத்தெருவெல்லாம் அலைந்தது
மருந்துக்காக.
எதற்கும்
திருவள்ளுவரையே
கேட்டுப் பார்ப்போம் என்று
தேரைத் திருப்பியது
அகராதி.
உடல்நலம்கெட்ட சொற்களை
அழைத்துவராமல்
திடுமென நீமட்டும்
வந்துநிற்கிறாயே
நான் என்ன சொல்லமுடியும்?
என்றார் திருவள்ளுவர்
"தவறுதான்
கவலை காரியமாற்றாதுதான்"
என்று தலைகுனிந்த
அகராதி
உடன்வந்தசொற்களோடு
திரும்ப முற்பட்டபோது
"கொஞ்சம்நில்"
என்ற திருவள்ளுவர்
மருந்து அதிகாரத்துப்
பத்துமாத்திரைகளைப் பனையோலை
ஒன்றில்
மடித்துக்கொடுத்துவிட்டுச்
சொன்னார்
"எதற்கும்
சொற்களை நோய்பரப்பும்
பொய்யோடும்
புறங்கூறலோடும்
பழகாதவாறு பார்த்துகொள்.
நோய்இறங்கலாம்"
என்றார்.
இப்போது
தேர்
வார்த்தை வளாகத்தைநோக்கித்
திரும்பிக்கொண்டிருக்கிறது
.............................................................
22-11-2024 காலை 6-மணி
உடல்நலம் கெட்ட சொற்கள்-தலைப்பு
.........................................................................
உடல்நலம் கெட்ட சொற்கள் என்ற தலைப்பில்
22-11-2024 காலை 6 மணிக்கு எழுதிய
ஈரோடு தமிழன்பன் கவிதைக்கு பாராட்டு.
................................................
கவிதை அண்ணலே!
___________________________________________________
கவிதை அண்ணலே!
உங்கள் சொல் தேர்
புகாத இடமில்லை.
உங்களுக்கு
பீலிபெய்ச் சாகாடு கூட
அச்சிறாது
அச்சொற்பண்டம் சால மிகுத்துப்
பெய்யினும்.
சொற்களின் உடல் நலம் கெட
சொற்களின் உள்ளம்
புகுந்து பார்க்க வேண்டும்.
உங்கள் கவிதைளில் நுழைந்து
வருபவர்களின் சொற்களில்
நோயேது? நொடியேது?
வள்ளுவரின் ஓலை மருந்து
உதவிக்கு வந்தது.
தினம் தினம் தங்கள்
கவிதை ஏந்தி வரும்
சொற்களே
எல்லாமும் தரும்.
எல்லா நலமும் தரும்.
எல்லா வளமும் தரும்.
பரவாயில்லை
உங்கள் தேர்
எல்லா மூலை மடுக்கும்
உலா வரட்டும்.
பாரி நாட்டுக்கு கூட
சென்ற தாக சொன்னீர்களே.
உங்கள் தேரை இந்நேரம்
பறி முதல் அல்லவா செய்திருப்பான்.
முல்லையின் மெல்லிய
உள்ளங்கள் கூழாகிப் போனதென்று
தேர்களையே அதற்கு
தேசவுடைமை ஆக்கியவன் அல்லவா
அவன்.
சொற்களின் உடல் நலம்
அவற்றின் ஒலி நலமே.
இந்த பனங்காட்டில் அதன்
ஒலி மழையில்
நனைந்தாலே
அதில் சங்கத்தமிழின்
உயிரளபடை ஒற்றளபடை
இன்னிசை அளபடைகளின்
மாத்திரைகளை உட்கொண்டாலே
போதுமே.
இருப்பின்
உங்கள் தமிழ்ச்சொற்களின்
மருத்துவ உலாவுக்குள்
ஒரு "மூவர்"உலாவும்
உள்ளது.
அது
உங்கள் மொழி ஆற்றல்.
உங்கள் சொல் ஆற்றல்.
உங்கள் அறிவு ஆற்றல்.
வாழ்க நீவிர்!
வாழ்க நீவிர் நீடூழி.
__________________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக