"நவம்பர் பதினான்கு"
___________________________________
ஒரு ரோஜாப்பூ
ஒரு கோட்டின் பித்தானில்
பூத்தது
நமக்குத்தெரியும்.
அது உலக அமைதிக்கு
சிறகடிக்கும் புறாவாக
வானத்தில் எழும்பியதும்
நினைவுக்கு வருகிறது.
இந்திய மண்ணில் மதக்கள்ளிகள்
வேர் பிடித்து
சாதிவெறியின் நச்சுமரங்களின்
இருட்டு நிழல்களில்
மானுடம் எனும் மாணிக்கச்சுடர்
மங்கிக்கிடந்ததும்
நம் மனங்களில் ஆறாத புண்களாய்
துன்புறுத்திக்கொண்டிருந்ததும்
நமக்குத் தெரியும்.
உலக வரலாற்று மேதை
ஆர்னால்டு டாயன்பி
"இந்த ஆசிய ஜோதி
வரலாற்று ஆசிரியர் ஆகியிருந்தால்
நான் இப்படியொரு வரலாற்று மேதை
ஆகியிருக்கும் வழி
அடைத்து அல்லவா போயிருக்கும்"
என்று வியந்த ஒரு வரலாறும் உண்டு.
"தி டிஸ்கவரி ஆஃப் இந்தியா"
என்ற நூலே அது.
அந்த மானுடநேய "ரோஜா"வான
ஜவஹர்லால் நேரு
என்ற "மேரு"வின் மீது
இந்த மின்னட்டாம்பூச்சிகள்
மோதி மோதி
தம்மை இன்னும் மோசமான
ஒரு இருட்டு யுகத்துள் தள்ளி
வீழ்ந்து கிடக்கின்றன.
மதச்சார்பற்ற
அந்த சோசலிசக் கட்டுமானத்தை
தட்டி நொறுக்க
அனுமார் வேடத்துக் கதாயுதங்கள்
பெருங்கூச்சலோடு வருகின்றன.
இந்த "குழந்தைகள் தினத்தில்"
அந்த சுடர் முகம் நமக்கு
பெரும் அரணாய் நின்று
அமைதிப் புன்முறுவலோடு
எதிர் கொள்கிறது.
அமரர் நேரு
அமைத்த பாதையே
மக்களின் பாதை.
"ஜெய்ஹிந்த."
======================================================
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக