புதன், 13 நவம்பர், 2024

யுகக்கவிஞனே!"

 

யுகக்கவிஞனே!"
_________________________________________________‍‍
சொற்கீரன்
காக்கையைப்பாடினாய்
காக்கைப்பாடுநன் எனும்
ஒரு சங்கப்புலவர் போல.
அது வெறும் பறவையா?
சமுதாயத்தை
ஆட்டி அசைக்கும்
கருப்புக்கொடியாய்
மனித சிந்தனைக்கு
அது சோறூட்டிய படலத்தை
ஒரு வியத்தகு யுத்த காண்டமாக்கினாய்
அந்தப்பாடலில்.
இப்போது
வயதுகளை வசைபாடுவதாய்
உன் சொல்லின் சோழிகளை
இலக்கியப்பிழம்பின் கூறுகளாக்கி
பல்லாங்குழி அல்லவா
ஆடியிருக்கிறாய்.
"யுகக்கவிஞனே"என‌
உன்னை அழைத்தால்
இந்த யுகம் கூட உச்சி குளிர்ந்து
உன் முன் கைட்டி வாய் புதைத்து
தனக்கு
ஒரு வாழ்த்துரைக்காக‌
உன்னிடம் "நேரம்" கேட்கலாம்.
அப்போதும் கூட‌
ஓடு ஓடு யுகமே ஓடு
அங்கே ஒரு வரலாற்று நிகழ்வு
கன்னிக்குடம் உடைத்து
கண் விழிக்க காத்திருக்கிறது
ஓடு ஓடு
என்றல்லவா விரட்டியிருப்பாய்!
"ஒப்பற்ற கவிஞனே"
வேறு ஏதும் சொல்லி
அழைக்கும் வலிமை
என்னிடம் இல்லை.
நீ எழுதிக்கொண்டே இரு.
அது போதும் எங்களுக்கு.
முறியாத பேனாவாய்
கசங்காத காதிதமாய்
இந்த விண்ணும் மண்ணூம்
உனக்கு எப்போதுமே
உன் கவிதைக்கு
ஏங்கி நிற்கும்!
___________________________________________
பார்த்து நடந்துகொள்!என்ற தலைப்பில்
13-11-2024 காலை 08.50 ல்
எழுதிய
ஈரோடு தமிழன்பன் கவிதை பற்றிய கவிதை இது.
______________________________________________
எல்லா உணர்ச்சிகளும்:
Sivasankaran Subramanian

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக