ஒரு யாழுக்குக் குடியிருக்க
வீட்டைக்கொடுத்தவன்
பாட்டுக்கேட்க
எந்த சங்கீத சபாவுக்குப்போவான்?
அவன் வீட்டுக்கதவைத்தட்டி
வைகறைநுழையலாம்
ஒரு பூபாளம்என்னும்
புறநீர்மைப்பாட்டாகப்பார்த்து
அழைத்துக்கொண்டுவந்தால்,
இரவுநுழையலாம்
ஒரு நீலாம்பரிஎன்னும்
மேகராகக்குறிஞ்சிப்
பாட்டிடம்
பரிந்துரைக் கடிதம் வாங்கிவந்தால்,
குழந்தையின் தொட்டில்மெல்ல அசையும்.
இமைப்பொன் கதவுகள்
மூட இசையும்.
தூங்கி எழுந்தபெரியவர்
படுக்கைவிரிப்பை உதறினால்
அறையெங்கும் கமகங்கள் பரவும்,
ஒரு யாழுக்குக் குடியிருக்க வீட்டைக்கொடுத்தவன்
தெம்மாங்குக்கும்
கும்மிக்கும் குரவைக்கும்
சொந்தக்காரனாக இருப்பான்.
தாலாட்டுக்கும்
ஒப்பாரிக்கும் உறவாக இருப்பான்
தாலாட்டைக்கேட்பவன்
இன்னும் ஒருமுறை பிறக்கவிரும்புவான்
ஒப்பாரி கேட்பவன்
தனக்கான ஒப்பாரியை
இருக்கும்போதே கேட்டுவிட
ஆசைப்படுவான்
13-11-24 இரவு 9-40
தலைப்பு
வீட்டை யாழ்குடியிருக்கக்கொடுத்தவன்
யாழ் மீட்டி....
____________________________________________
"புல்லை நகையுறுத்தி
பூவை வியப்பாக்கி"
தந்தவன் தமிழை இங்கு
யாழ் நரம்பாக்கி
ஒலித்துடிப்புள் ஓராயிரம்
மேள கர்த்தா நாடிகள் ஊடி
விடியல் பண்ணின்
விழிவாசல் திறந்து
காட்டினாய்.
தாலாட்டுகளின்
உயிரெழுத்தும் மெய்யெழுத்தும்
தீர்ந்தபின்
ஒப்பாரியிலும் ஒரு
அகர முதல எழுப்பிக்காட்டினாய்.
ஒலி பிறக்கும் விண்ணிலிருந்து
இழிந்து வரும் அமிழ்த ஒலி
தமிழ் அருவி என்று
தடவிக்காட்டினாய்
உன் சொல் யாழ் மீட்டி.
இன்று அந்த கவிஞன்
ஒரு நாள் போதுமா?
எனக் கேட்க மாட்டான்.
ஏனெனில்
காலச்சுருதிகள் உன் தமிழில்
சுருட்டிக்கிடக்கும்
நயம் கண்ட பின்னே
நாவெழா மெய்விதிர்ப்பில்
மீண்டெழுந்து வந்து
உன் புகழ் தொடுப்பான்
உன் அகம் கலப்பான்
நம் செம்மொழித்தமிழாலே!
________________________________________
சொற்கீரன்
(13.11.24 அன்று இரவு 9-40 ல்
"வீட்டை யாழ்குடியிருக்கக்கொடுத்தவன்"
என்ற தலைப்பில்
ஈரோடு தமிழன்பன்
எழுதிய கவிதைக்கு ஒரு "இசைப்பாட்டு")
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக