ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

உதிர்வதற்காக பூக்கவில்லை நீ!



உதிர்வதற்காக பூக்கவில்லை நீ!

===================================================
ருத்ரா இ பரமசிவன் 


நான் 
இந்த பூக்களை பாடவரவில்லை.
பட்டென்று 
இந்த பிரபஞ்சம் ஒரு பெருவெடிப்பு எனும் 
ஒரு பிக் பேங்கை 
பூத்தது போல் 
தமிழா 
உன் மனதைப்பூத்து விடு.
அதன் அக்கினி மகரந்தங்களில் 
ஒரு விடியல் வானத்தின் விளிம்பு 
நம்பிக்கையின் ஜரிகையாய் 
நெசவு செய்யட்டும்.
பத்து தலைகளுக்கும் மேல் 
கொத்து கொத்து களாய் 
ஆசையும் குரோதமும் வைத்துக்கொண்டு 
இன்னுமா இவர்கள் 
ராமர் வேடம் போட்டுக்கொண்டிருப்பது?
பிறப்பொக்கும்  மனிதரிடையே 
வரப்புகள் வெட்டும் 
குறுகிய மனத்துக்கா 
கும்பாபிஷேகம் பண்ணிக்கொண்டிருப்பது?
கடவுள் 
எனும் நட்டகல் 
மனிதன் நட்டது தானே?
அது 
இன்னும் எத்தனை காலம் தான் 
அவன் வழியை மறித்துக்கொண்டிருப்பது?
அதில் மயில் வாகனம் எல்லாம் 
செதுக்குவது இருக்கட்டும்.
மனிதா !
முதலில் அதை 
உன் அறிவின் தொடர்ந்த பயணத்துக்கு 
ஒரு மைல் கல் ஆக்கு!.
இல்லாவிட்டால் 
உன் மொழியும் தொலைந்து போகும் 
உன் மண்ணும் மறைந்து போகும்.
புரியாத ஒரு கூச்சல் மொழி
ஒரு சாக்கடை நதியாய் 
உன் சரித்திரத்தை மூடப்பார்க்கும் 
ஒரு பேரழிவு 
காத்திருப்பதை எப்போது  புரிந்து கொள்ளப்போகிறாய் 
என் அன்பான தமிழனே ?
பூக்கள் 
பூத்து பூத்து சொல்வதை விட 
உதிர்ந்து உதிர்ந்து 
அவை உன் மீது 
எரியும் கேள்விகளாய் 
தைப்பது உனக்குத்தெரியவில்லையா?
சிந்து வெளியில் 
உன் முகம் பூத்திருந்ததே தமிழா!
ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக 
இந்த மண்ணில் காலடி விதைத்தவன் நீ!
குறுகிய கணவாய் வழியே வந்தவர்களா 
இந்தியா எனும் நம் தமிழ் மண்ணை 
விழுங்க பார்ப்பது?
உதிர்வதற்கு பூக்கவில்லை தமிழா நீ!
யாதும் ஊரே யாவரும் கேளிர் 
என 
உலகத்திற்கே ஒரு குரல் ஒலி க்க வந்தவன் நீ!

====================================================================













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக