செவ்வாய், 3 செப்டம்பர், 2019

எங்கள் அன்பான வாழ்த்துக்கள்.

எங்கள் அன்பான வாழ்த்துக்கள்.
===========================================ருத்ரா இ பரமசிவன்.


டாக்டர் தமிழிசை அவர்களே
உங்களுக்கு
எங்கள் அன்பான வாழ்த்துக்கள்.
ஆளும் கட்சி
தாங்கள் ஆளுகின்ற
மாநிலங்களுக்கு மட்டும்
அந்த பொம்மைகளை
அப்படியே அனுப்பி வைப்பதும்
எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற
மாநிலங்களில் மட்டும்
அந்த பொம்மைகளுக்கு
உயிர்கொடுத்து
சாவி கொடுத்து முறுக்கி
கூடவே
மீசையையும் முறுக்கி
அனுப்பி வைப்பது தான்
மரபு ஆகிபோய் விட்டது.
மாநில சுயாட்சி என்பது
இப்போதைய மத்திய ஆட்சிக்கு
"கெட்ட வார்த்தையாக" ஒலிப்பது
மட்டும் அல்ல‌
கெட்ட கனவாகவும்
தோற்றம் தருகிறது.
ஆனால்
நம் அரசியல் அமைப்பும்
நம் ஜனநாயக முறையும்
மக்களைக்காக்கும் அரண்களாகத்தான்
அமைக்கப்பட்டிருக்கின்றன.
வெறும் எண்ணிக்கை ஜனநாயகம் என்றால்
கிருஷ்ணர்
கௌரவர்கள் பக்கம் தானே போய்
நிற்கவேண்டும்.
ஏன்
மிகச்சிறுபான்மையாக உள்ள‌
பாண்டவர்களுக்கு
பாஞ்சஜன்யத்தை முழங்கினார்?
இப்படிக் கேட்பது குதர்க்கம் இல்லையா
என்று
நீங்கள் குமுறலாம்,குதிக்கலாம்.
ஆனால்
எண்ணிக்கை இருக்கிறது
என்பதற்காக‌
"அரசியல் அமைப்பை"
தலை கீழாக புரட்டினால்
அப்போது மட்டும்
இதோ
அதர்மம் அழிக்க வந்துவிட்டேன்
என்று
அந்த கிருஷ்ணர் வரவா போகிறார்?
புராணங்கள் வேறு.
சமூக நீதி என்பது வேறு.
ஆளுபவர்களுக்கு
மக்களையெல்லாம்
அசுரர்களாக பார்க்கவைத்துவிடும்
ஒரு ஆதிக்கவெறியின்
கொம்பு முளைக்க ஆரம்பித்துவிடும்.
பெரிய மதம்
சின்ன மதங்களை
சின்னா பின்னமாக்கி
சாப்பிடத்துவங்கும்
ஒரு தத்துவம் சட்டமே ஆகி விடும்
அபாயமும்
நெருங்கி விடும் என்பதில்
ஐயமே இல்லை.

உங்களுக்கு வாழ்த்துக்களை
மலர்ச்செண்டு ஆக்கி கொடுக்கும்
வேளையில்
இப்படி
ஒரு "நியாய வைசேஷிகம்"
மற்றும் "சாங்கிய" வாதங்களையும்
செருகி வைத்து கொடுப்பதை
தயவு செய்து நெருடல்களாக
நீங்கள் எடுத்துக்கொள்ளவேண்டாம்
என்று
தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
அர்ஜுனனுக்கும்
அப்படித்தான் வாழ்க்கையின் எல்லா
சந்து பொந்துகளையும் காட்டி
அப்புறம்
"கொலை செய்"
அந்த வில்லுக்குள்ளும் அம்புக்குள்ளும்
நான் இருக்கிறேன்
என்றான் கிருஷ்ணன்.
ஜனநாயகம்
ரத்த கங்கைகளின் கங்கோத்ரி அல்ல.
மக்களின் குருட்சேத்திரம் இது.
மதத்தைக்கொண்டு
மானுடத்தின் புல்  பூண்டற்றுபோகும்
போர் முரசுகளை
அலற விடும் அதர்மங்கள் இங்கு
அரங்கேறலாமா?
மீண்டும் மீண்டும் உங்களுக்கு
எங்கள் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!


=====================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக