ஞாயிறு, 22 செப்டம்பர், 2019

கலிஃபோர்னியப் பனைமரங்கள்.




கலிஃபோர்னியப் பனைமரங்கள்.
====================================
ருத்ரா இ பரமசிவன்.



கலி ஃபோர்னியாவில் 
மக்கள் தங்கள் வீடுகளின் அருகே 
மிகச்செல்லமாக 
வளர்க்கும் மரங்கள் இவை.
நெடு நெடுவென்று 
கல்யாணத்திற்கு காத்திருக்கிற 
இளமங்கைகள் போல் 
அந்த கீற்றுகளை 
அசைத்து அசைத்து 
கனவுகளை உதிர்க்கின்றன.
நான் 
இதை ஒட்டிய பாதையில் 
நடைப்பயிற்சி செய்யும்போது 
அவை 
ஏதோ மௌன சலங்கைகள் ஒலித்து 
என் மனத்தை ஆட வைக்க்கிறது.
கீழே நிழல்கள் எல்லாம் 
அவை 
உதிர்த்த அமுதக்கனவுகள்.
என் அருமை மரங்களே 
என்ன சொல்கிறீர்கள்?

கவிஞரே!
இந்த பனை ஏடுகளிலும் 
சொட்டுகின்ற 
அந்த குறுந்தொகைச்  சிலிர்ப்புகளை 
உணர்ந்து 
கொள்ள முடியவில்லையா?
"அணிலாடு முன்றில்" 
என்றானே ஒரு தமிழன்.
காதல் ஏக்கத்தை கிச்சு கிச்சு மூட்டி 
ஒரு நெருப்பை ஏற்றி வைத்து 
அந்த செய்யுளுக்குள் 
தமிழ் எழுத்துக்களின் கருப்பையை 
உயிர்க்க வைத்த 
அந்த புல்லரிப்பின் கூச்சம் தாங்காமல் தான் 
நெளிந்து நெளிந்து காட்டுகின்றேன்.
என் மெல்லுடலில் 
இந்த அணிலின் விளையாட்டு 
இந்தக்கீற்றுகளில் 
பச்சையாக எரிந்து 
தணல் பூக்கிறதே! தெரியவில்லையா?

யாதும் ஊரே யாவரும் "கேளீர்!"
ஆம் 
கேட்டுக்கொள்ளுங்கள்!
பசிபிக் கடலோரத்திலும் 
இலக்கியப்பசியெடுக்கும் தமிழ் இது!

====================================










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக