வியாழன், 5 செப்டம்பர், 2019

சாய்வு நாற்காலி........

சாய்வு நாற்காலி........ 
===========================ருத்ரா இ பரமசிவன்


"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" 
என்று 
நாலாங்கிளாஸில் சத்தம் போட்டு படித்தோம். 

ஒன்றும் புரியவில்லை. 

"அன்னையும் தந்தையும் தானே"... 
அப்போதும் எம்.கே.டி.பாகவதரின் 
கணீர்க்குரலில் வடிந்த தேனை 
நக்கியவர்களாக மட்டுமே நாம். 

அங்கு அம்மா வெறும் சும்மா. 

"அன்னையின் ஆணை" படம் பார்த்த போதும் 
நடிகர் திலகத்தையும் நடிகையர் திலகத்தையும் 
ரசித்து போற்றினோம் 

அன்னை அங்கு வரவில்லை 

"தாயில்லாமல் நானில்லை" என்று 
வாத்தியார் வாயசைத்து நடித்தபோதும் 
நாம் வாயில் ஈ நுழைந்தது தெரியாமல் 
படம் பார்த்தோம். 

தாயின் பக்கம் நாம் போகவே இல்லை 

"சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு" என்று 
அன்று 
அவள் நம்மை தன் இதயத்தில் 
சாய்த்திருந்தது எல்லாம் 
இன்று 
இந்த‌ "சாய்வு"நாற்காலியில் ம‌ட்டுமே 
நினைவுக்கு வ‌ந்த‌து!

எனது அந்திவானம் 
என்னை மறைக்க 
வந்து விட்ட வேளையில்
இன்னும் ஒரு விடியலாய்
அம்மாவின் தோளில் நான்
சாய்ந்தாடும் 
இன்னும் ஒரு குழந்தையாய் நான்.
அம்மா பற்றிய 
பழைய சினிமா பாட்டுகள்
என் சுகமான தொட்டில்.



==============================================
ஒரு மீள்பதிவு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக