வியாழன், 19 செப்டம்பர், 2019

மனிதன் நினைப்பதுண்டு

https://www.youtube.com/watch?v=HvtLC3NvI4c&list=RDHvtLC3NvI4c&index=1



மனிதன் நினைப்பதுண்டு......
=========================================ருத்ரா

இந்தப்பாடலைக்கேளுங்கள்.
"அவன் தான் மனிதன்"
என்ற படத்தில் வரும் பாடல் இது!
இது ஒரு தத்துவப்பாடல்தான்.
மனிதன்
தன் மனப்புண்களின்
வலி தெரியாமல் வருடிக்கொண்டிருக்க
கண்டு பிடித்தது தான்
இந்த தத்துவங்கள்.
கடவுள் இருக்கிறது என்று
சொன்னாலும் தத்துவம் தான்.
என்னடா!
கடவுளாவது கத்தரிக்காயாவது
என்று
சொன்னாலும் தத்துவம் தான்.
வாழ்க்கை எனும் பாறாங்கல்லில்
உரசி உரசித்தேய்த்து
அந்த மீனின் செதில்களை
அப்புறப்படுத்தி
அப்புறம் அதை துண்டு போட்டு
சமைத்து சாப்பிடுவது
வாழ்க்கை.
அந்த உரசலும்
அந்த உதிர்தலும் தான்
தத்துவம்.
செதில்களாய் உதிர்ந்து கிடப்பது
யாரென்று நினைக்கிறீர்கள்?
நாமும் கடவுளும் தான்.
போகட்டும்.

இந்தப்பாடலில்
ஒரு மின்னல் குழம்பு
நம் உயிருக்குள்
ஒரு ஊற்றாக சுரக்கிறது.
அந்த பின்னணி இசை.
இசைக்கருவிகளைக்கொண்டு
நம் மதிப்பிற்குரிய
எம் எஸ்.வி அவர்கள்
நம்மீது பிழிந்து ஊற்றுகிறார்.
அவருக்கு
இசை விரும்பிகள் தான்
தெய்வம் என்றால்
அந்த தெய்வங்களுக்கு
அவர் கும்பாபிஷேகம் செய்கிறார்.
அந்த தேன்மழையைப்பொழிந்து
நம் மீது
உருகிக்காட்டுகிறார்.
உருக்கிக்காட்டுகிறார்.
அழுது காட்டுகிறார்.
நம் அழுகையையும்
அதில் காட்டுகிறார்.
அந்த இசை "லாவா"வில் எல்லாம்
உருகி ஓடுகிறது.
உணர்வின் சிவப்புக்குழம்பு.
வாழ்க்கையின் அர்த்தங்கள்
சிலிர்த்துப் பாய்கிறது.
இறுதி வரிகளில்
நடிகர் திலகத்தின் கைகளில்
வரும் அந்த வெள்ளைப்புறாவின்
இறக்கைகளில் நாம் துடிக்கிறோம்.
நாம்
"இறக்கையில்"
இப்படித்தான் துடிப்போமோ?
அந்த இசைக்கருவிகளின்
பின்னணி இசையில்
பிரபஞ்சத்தின் ஒரு பிரளயம்
நம் உடலின்
கோடிக்கோடி செல்களின்
அந்த உயிர்த்துளி அறைகளுக்குள்
புகுந்து புகுந்து நிரம்பி
வெளியேறுகிறது.
அப்பப்ப !
தாங்க முடியவில்லை
எம் எஸ்.வி அவர்களே
உங்கள் இதயப்பிழிசலை.
உங்கள் இதயக்கிழிசலை!!

================================================







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக