வியாழன், 19 செப்டம்பர், 2019

உடைத்து எறி !

உடைத்து எறி !
====================================================ருத்ரா


என்ன கவலை உனக்கு தமிழா?
உன் தமிழை பிடுங்கியெறிந்து விட்டு
ஒரு கள்ளிப்பூவை
உனக்கு மத்தாப்பு காட்டும்
இந்த உன்மத்தர்களா
உன் வீட்டுக்கு பூட்டு போட முனைவது?
கற்பனையாய் ஒரு கடவுளுக்கு
இரைச்சல் மழை தூவும்
சத்தங்களா உன் வரலாறு?

மாடி மனைக்கட்டிடங்கள்.
இன்றைய நகர்களே  வியக்கும்
நகர அமைப்புகள்.
இன்னும் இன்னும்
நாம் படிக்கும் தமிழ்ப்பாடம் போல்
அந்த முத்திரைகள்!
இவையெல்லாம் நம்
வாழ்க்கைசசுவடுகளின்
அரிய சுவடிகள்.
சிந்து என்ற தூய தமிழ்ச்சொல்லே
அந்த பேராற்றுக்கு பெயர் ஆகிப்போன
ஒரு சான்று போதுமே
அது நம் தமிழ் நாகரிகத்தின்
உயிர் நாடி என்று.

உலகம் எல்லாம் சென்று
திரட்டிய ஒலிக்கோவைகளை
ஒரு மொழியாக்கி உலவவிட்டு
அதை சமக்கிருதமாய்
ஒரு சம உரிமை தந்து
அதற்கு புலமை ஊட்டிய
ஒரு நாகரிக மாண்பு கொண்டதல்லவா
உன் தமிழ் மொழி!
ஆனால்
வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது போல்
அந்த சமஸ்கிருதமா
உன்னை வீழ்த்தும் தந்திரம் வகுப்பது?
நாகரிகம் மிக்கவர்கள் ஒரு
பொமரேனியனை
கையில் பிடித்துக்கொண்டு
போனது போல்
நீ வளர்த்த குட்டியா
உன் ஈரக்குலைகளை தின்ன வருகிறது?
போதும் தமிழா.
இனியாவது நீ விழித்துக்கொள்ள வேண்டும்.
பொருளே புரிந்துகொள்ளாமல்
பெயர் சூட்டிக்கொள்வதும்
திருமணம் புரிந்து கொள்வதும்
ஏன்
இறந்து போய் ஈமசடங்கு
செய்து கொள்வதும்
உனக்கு
வசதியாய் இருக்கிறது
சௌகரியமாய் இருக்கிறது
என்று
நீ உட்கார்ந்து இருப்பது
அந்த பூதத்தின் வாய்  அல்லவா!
அந்த பிணத்தின் உடல் அல்லவா!
உன் உயிர்மொழியைச்சுற்றி
அடைத்திருக்கும் இந்த‌
சூழ்ச்சிக்கூடுகளை
உடைத்து எறி!
உன் செல்ல மொழியை வைத்தே
உனைக் கொல்ல ஒரு மொழி செய்த
வர்ண பேதம் எனும் அந்த கசாப்பு அரிவாளை
உடைத்து நொறுக்கி விடு.
உன் மொழியும் மண்ணும்
உனக்கு மீண்டும் வெற்றி சூட
வீறு கொண்டு  எழு தமிழா!
வீறு கொண்டு எழு!

==========================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக