சனி, 8 ஏப்ரல், 2017

ஒற்றை சிவப்பு ரோஜா


ஒற்றை சிவப்பு ரோஜா
======================================ருத்ரா இ பரமசிவன்

"என்னில் நீ
உன்னில் நான்."

....பேனா ஓடியது.
பேப்பரில் எல்லாம்
உழுத சுவடுகள்.
தினமும்
ஒன்று எழுதி நீட்டுவேன்.
புரிந்து கொண்டாளா அவள்?
தெரியவில்லையே.
ம்
என்று வாங்கிக்கொள்வாள்.
கசக்கி முகத்தில் வீசவில்லையே
என்று எனக்கு ஆறுதல்.
இது தான் சாக்கு
என்று
எங்கே இவன்
"மாயா பஜாரின்"
இருட்டு மூலைக்கு
இழுத்துக்கொண்டு ஓடுவானோ
என்று
அவளுக்கு ஒரு பயம்.
அந்த மிரட்சி
மருண்டு உருண்ட
அவள் மான்விழிகளில்
தெரிந்தது.
இடையே ஏன் இந்த பனிமூட்டம்.

மச்சிகள் மன்றத்தில்
என் தலை உருண்டது.
"மச்சான்.
ரீம் ரீமா
முத்துக்குமார் லேகியங்களை
உருட்டிக்கொடுத்து புண்யமில்லடா.
தனியாப் பாத்து
சும்மா நச்சுன்னு கேட்டுடு."
மசோதாவும் சட்டமும்
ஏகமனதில் நிறைவேறியது.

பட்டாம்பூச்சிகளின்
அந்த சுடிதார் வனத்தில்
சூடு கிளப்பியது
அவள் "ம்"கள்.
"என்னடி
ம் னு சொன்னா
பெரிய "எம்"தியரின்னு நெனப்பா?
குவாண்டமும்
காதலும் ஒண்ணு தான்.
புரியாமலேயே பட்டம்
வாங்குற மாதிரிதான்.
உன் புன்சிரிப்புலெ
நூறுல ஒரு பங்காக்கியாவது
கோடு போட்டுறக் கூடாதா?
புள்ள ரொம்ப தவிக்குது."
அவள்
அதற்கும் ஒரு "ம்"தான்.

தனியா "நச்"சுண்ணு கேக்கும்
அந்த தருணமும் வந்தது.

ஒற்றை சிவப்பு ரோஜாவும்
அதன் மேல் ஒரு வெறும் பேப்பரும்
(கவிதை எழுத வில்லை
அது அவனிடம்
முரண்டு பிடித்துக்கொண்டது.
அட போப்பா.நீ மட்டும் என்று.
பேனா கூட "ட்ரா"வுக்குள்
தூங்கபோய் விட்டது)

அவள் முன் நீட்டினான்.
அவள்
அந்த வெள்ளைப்பேப்பரை
ஆவலுடன் எடுத்துக்கொண்டாள்.
"எனக்குப் பிடித்த கவிதை."
"க்ளுக்"கென்று
சிரித்துவிட்டுப்போய்விட்டாள்.
அந்த‌
வெள்ளைச்சிரிப்புக்கும்
வெள்ளைப்பேப்பருக்கும்
என்ன அர்த்தம் என்று
அவனுக்கு விளங்கவில்லை.
அந்த ஒற்றைச்சிவப்பு ரோஜா மட்டும்
அவன் கையில்.

==================================================ருத்ரா
23.11.2013 ல் எழுதியது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக