வியாழன், 20 ஏப்ரல், 2017

இருட்டின் வயிறு கிழித்து

இருட்டின் வயிறு கிழித்து
=========================================ருத்ரா

இருட்டின் வயிறு கிழித்து
ஒரு மின்னல் பிரசவம்.
சவமாகவே பிறந்து
சவமாகவே கிடந்து
சவமாகவே மறையும்
மனித குப்பைகளை
மாணிக்க நெருப்பின்
சுடர்கள் பூக்க வைத்தவன்
மாமனிதன் அம்பேத்கார்.
அம்பேத்கார் எனும் சரித்திரம்
அக்கினி மகரந்தங்கள் தூவிய‌தில்
ஆதிக்க வேள்வியின்
காவிப் புகை மூட்டம்
காணாமல் போனது.
ஆனாலும் வாக்குப்பெட்டிக்குள்
அந்த மதவெறியின்
விரியன் பாம்புக்குட்டிகள்
விரிக்காத சாணக்கிய தந்திரங்கள் இல்லை.
அச்சமில்லை !அச்சமில்லை !
ஆம்! அச்சம் எதற்கு?
சாதி சமயக் கொடுநெருப்பையே
கொளுத்தி சாம்பலாக்க வந்த‌
ஊழி நெருப்பு அல்லவா அம்பேத்கார்.
சமுதாயமும் பொருளாதாரமும்
சட்டமும் அரசியலும்
இவனிடமிருந்து
புது அத்தியாயங்களை
பதிப்பித்துக்கொண்டன.
நம் நாட்டு தெய்வங்கள்
ஆறு வகையாய் நின்று
திருவிழாக்களில்
நான்கு வர்ண மத்தாப்பு
கொளுத்தி கொளுத்தியே
மனிதனை பிளந்து விட்டன.
அடித்தட்டு மனிதனை தொடாதே
என்று வஞ்சகங்கள் ஓதின‌
வேதங்களின் இரைச்சல்கள்.
எளிய மனிதர்களின் கூக்குரல்களை
கேட்காத அந்த
இறந்து போன தெய்வங்களை
சாதி மதத்தில் இறந்து போன
அந்த பிணங்களே
கட்டிக்கொண்டு அழட்டும் என்று
அறிவின் அன்பின் புதிய ஒளி
பாய்ச்சும் மானிடவியலின்
படிக்கட்டுகள் கட்டித்தந்த‌
நம் பயணத்தின்
சிற்பியே
நம் மாமேதை அம்பேத்கார் !

==========================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக