செவ்வாய், 25 ஏப்ரல், 2017

புறவு கொடு செய்தி

புறவு கொடு செய்தி
=============================================ருத்ரா இ பரமசிவன

மதிமலி புரிசை பன்மாடப் பெருநகர்
மண்டமர் கடுவளி புன்சிறை ஆர்ப்ப‌
காண்குவன் கண்குவன் கண்டிலன்.
பொருள்வயின் பிரிந்த நின் வெள்ளிய குன்றத்து
அறிவுசெறிக் கிழவன் நுண்பொறி ஆற்றும்
மனை எது? வினை எது?அறிகிலன் மன்னே!
காற்றின் வெளியிடை ஓர் கனைகுரல் கேட்டேன்.
மின்னல் காட்டின் அதிர் ஓதை மிழற்றும்
துடியன்ன உருவும் அஃதில் அறைதர‌
கண்டிசின் யானும் பொறி கிளர்ந்தேன்.
புறவு கொடு செய்தி எதிர்வரும் முன்னே
பசலைப்புன் நோய் நின்னை வருத்தும்
அளிநிலையான் என்னிலும் முன்னே
பறந்தாய்! பாவாய் ! திண்தோள் மார்பன்
தழீஇச்செல்ல வானும் கிழித்து
ஆறு செய்தாய் அவிர்த்தீ அவி உற‌
அங்கொரு மாடத்து உள் உள் உறைசெயும்
அவனைக்காண்பாய் உன் ஆவி மீக்கொளவே!



விளக்க உரை
==============================================

( அந்தப்புறா அந்த நியூயார்க் நகரத்தை ஒட்டிய கடற்பரப்பில் பறந்துகொண்டிருக்கிறது.புறாவின் சிறகுத்துடிப்புகள் இங்கே தலைவியின்
இதயத்துடிப்புகளாய் கேட்கிறது)

பொருள்வயின் பிரிந்த தலைவன் வெளிநாட்டுக்கு வந்து கணினி  மின்பொறியில் பணியாற்று கிறான். நிலவு தொடும் உயரத்தில் கட்டிடங்கள் நிறைந்த நகர் அது.அங்கு போய் அவனைக் கண்டுவந்து செய்தி சொல்லும்படி தலைவி ஒரு புறாவைஅனுப்புகிறாள்.ஆனால் அதுவரைக்கும் கூட இருப்புகொள்ளாமல்பிரிவு நோயின் துன்பம் மிகுதியால் தலைவனைக்கண்டுவிட வேண்டும் என்று தானே அந்த புறாவுக்கும் முன்பே பறக்கிறாள்.(அல்லது மனப்பறவையை அனுப்புகிறாள்).புறாவும் காற்றின் இடுக்குகளில் அந்த தலைவியின் உள்ளொலியைக்கேட்கிறது.அவளது
துடியிடை எழிலை ஒரு வரைவு  உருவமாக அங்கே காண்கிறது.

"எனக்கும் முன்னே வந்து விட்டாயே இங்கு! உன் காதல் வேதனை புரிகிறது.அந்த பல அடுக்கு கட்டிடடங்களில் ஓர் அறையில் தான்
"வெள்ளியங்குன்றத்து தலைவன்" எனும் உன் காதலன் இருக்கிறான்.
உன் ஆவியால் அவனைப்போய் பற்றிக்கொள்" என்கிறது புறா.
கணினி யுகத்திலும் சங்ககாலக் காதல் இங்கே துடிக்கிறது.
அந்த புறாவின் சிறகுத்துடிப்புகளை கற்பனைக்கண்கொண்டு   உற்றுப்பாருங்கள். அவள் துடிப்புகள் உங்களுக்கு புரியும்.

================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக