புதன், 26 ஏப்ரல், 2017

கோமாவில் தமிழ்

கோமாவில் தமிழ்
=============================ருத்ரா


ஜாவா சுமத்ராவில் தமிழ்.
பர்மா மலேசியா சிங்கப்பூரில் தமிழ்.
அது போல்
"கோமா"வில் தமிழ்..
அது என்ன கோமா?

அந்நிய மொழி மயக்கத்தில்
சொந்தமொழிக்கே
இங்கு
ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தேவை.


அறுபது தமிழ் "வருஷங்கள்"
உங்கள் வாயில் நுழைந்தது உண்டா?

பார்த்து பார்த்து
கம்பியூட்டர்களில் தடவி தடவி
வைத்தாலும்
உங்கள் குழந்தைகளின்
தமிழ்ப்பெயர்கள் யாவும்
ஏன் "ட்ரியா .ட்ரிஜா ப்ரிஜா..."
என்று ஒலிக்கின்றன.

பத்திரிகைகள் சினிமாக்கள்
டி.வி, கை பேசி கலாச்சாரங்கள்
எல்லாமே
த‌மிழை கோமாவில் தான்
ப‌டுக்க‌வைத்திருக்கின்ற‌ன‌.

ஆங்கில‌த்தில் ப‌டியுங்க‌ள்
த‌மிழில் ப‌டுத்துக்கொள்ளுங்க‌ள்.
உல‌க‌த்த‌மிழ் வாழ‌ட்டும்
த‌மிழுக்கு
த‌மிழ் நாட்டில்
சுடுகாடு போதும்.

க‌ல்லூரிக‌ளில்
ஆங்கில‌த்தில் தானே
ப‌டிக்கிறீர்க‌ள்.
ப‌ள்ளிக‌ளில் ப‌டிக்கும்
ஆனா ஆவ‌ன்னா கூட‌
உங்க‌ளுக்கு
"தீட்டு" ஆகிப்போன‌தென்ன‌?
ஆரம்பக் கல்வியிலேயே
அன்னைத்தமிழுக்கு
"ஆணி" அடிக்க்
கிளம்பிவிட்டீர்களே.

என்றைக்குத்தான் அந்நிய மொழியை
புரிந்து கொள்வது
என்று ஆதங்கப்பட்டால்
கோவில்களிலிருந்தே
ஆரம்பியுங்களேன்.
ஆங்கிலத்தில் அர்ச்சனைக்கு
சீட்டு வாங்குங்கள்.

பேராசை.........வாழ்க்கை முறை
ல‌ஞ்ச‌ம்.......ஆட்சி முறை
க‌ட‌வுளே இல்லாத‌ ம‌த‌ங்க‌ள்
ம‌ர‌த்துப்போன‌ தேர்த‌ல்கள்

எனும்
புதிய‌ வ‌ர்ணாசிர‌ம‌த்தின்
நான்கு வ‌ர்ண‌ங்க‌ளில்
நீங்க‌ள்
த‌மிழ‌னின் சாய‌ம் இழ‌ந்து போனீர்க‌ள்.
ம‌னித‌னின் நிற‌ம் இழ‌ந்து போனீர்க‌ள்

================================ருத்ரா
மே 26  2013 ல் எழுதியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக