ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

உன்னையே நீ எண்ணிப்பார்

உன்னையே நீ எண்ணிப்பார்
=======================================செங்கீரன்.

இது சாக்ரடீஸ்
புதுத் தலைமுறையினரை நோக்கி
அறைகூவல் விட்டதாய்
எழுதிய‌
கலைஞரின் எழுத்துக்கள்.
தமிழா என்ற‌
உரத்த முழக்கமே
அதற்குள்  ஒலித்தது.
தமிழ் என்றால்
தேவாரம் இனிக்கும் மொழி.
திருவாச‌கம் உருக்கும் மொழி.
கம்பன் கலக்கிய மொழி.
ஆனால்
மனிதனுக்கு மனிதன்
கூறுபோடுவதையும்
சுவர்கள் கட்டி
குறுகிக்கொள்வதையும்
சமுதாயச்சடங்குகள் ஆக்குவதையும்
நம் இனிய மொழி
அடைகாக்க வேண்டுமா?
தமிழ்
எல்லா ஆதிக்கங்களையும்
தகர்க்க வந்த மொழி!
எல்லா கொடுமைகளயும்
எரிக்க வந்த மொழி.
உலகின் அறிவுத்திரட்சியை
உள்ளடக்கி வந்த மொழி.
அதனால் தான்
கலைஞர் எழுத்துக்கள்
அந்த
கடல்நுரைபோல் நரைத்த‌
கிரேக்கத்துப் "பிசிராந்தையார்" போல்
மொழி இமிழ்த்தது!
கோவில்கள் நம் வரலாற்றின்
கற்கண்ணாடிகள் தான்.
ஆனால் சிந்தனையற்ற‌
சாதி மத அழுக்குகளைக்கொண்டு
அதை அபிஷேகம் செய்யும்
போலித்தனங்கள் எல்லாம் போகவேண்டும்.
சாதிகள் "தமிழிலும்" உண்டு என‌
சாதிக்கும் சனாதனிகள்
அணியும் வேடங்களையும் முகமூடிகளையும்
அடித்து நொறுக்கத்தான் வேண்டும்.
வேர்வை வடிய வடிய‌ உழைக்கும் கரங்கள்
இந்த சமூக அநீதிகளை
எரித்துவிட எழுச்சிகொள்ளும்
நெருப்பின் அலைகள் ஆகும்.
தூய காற்றை உட்கொள்ளத்துடிப்பவனே
தூய தமிழை உட்கொள்ளும் தமிழனாய் நீ
ஆகவேண்டும்.
மந்திர மொழிக்கும்பல்கள்
மண் கவ்வ வேண்டும் இனி!
தமிழ் உன் மொழி மட்டும் அல்ல.
அதுவே உன் அரசியல்.
உன் உயிர் மெய் காப்பாளன்.
டெல்லி சாணக்கியர்கள் நகர்த்தும்
ஒவ்வொரு காய்களிலும்
தமிழ்த்திருநாட்டை
சுடுகாடு ஆக்கும் சுவடுகள்
மட்டுமே தெரிகிறது.
தமிழா!
உன் குழந்தைகளுக்கு
சமஸ்கிருதப்பெயர்களை சூட்டி
அழகுபார்க்கும்
நீ
எப்போது புரிந்துகொள்ளப்போகிறாய்
ஒரு கிடு கிடு மரணப்படுகுழியில்
விழ இருக்கிறாய் என்று!

================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக