வெள்ளி, 7 ஏப்ரல், 2017

முக்குளி

Inline image 1
ஓவியம்  by  ருத்ரா


முக்குளி
===================================ருத்ரா


தாக்குப்பிடிக்க முடியவில்லை.
நீர்ச்சுருள்கள்
பந்து விளையாடுகின்றன.
உன் கண்களே
என் முதுகில் சுமக்கும்
ஆக்சிஜன் கூடுகள்.
அதைத்தேடியே
ஆயிரம் தீவுகள் செல்லுவேன்.
தூக்கம் தின்ற சுறாக்கள்
என்னைத் துண்டு துண்டு ஆக்குகின்றன.
உன் ஒரு சிமிட்டலில்
வானவில்கள் எத்தனை?
மின்னல் விழுதுகள் எத்தனை?
வானங்கள் உருகி கடல்கள் ஆகின.
அன்று 
கல்லூரி வகுப்பில்
முண்டைக்கண் எண்கள் துருத்திய‌
வட்டக்கடிகார
வினாடி முள் கூட‌
செக்கு மாடு போல்
சுழன்று கொண்டு தானே இருந்தது.
இருப்பினும்
என்னிடம் "டைம்" கேட்டாயே!
அந்த இனிப்பு
அறை முழுத்தும் நீரூறி
நினைவெல்லாம்
கனவின் சுவை படர்ந்ததே.
ஒரு சின்ன இழையை சிரிப்பாக்கி
நெளியவிட்டு
நெய்து விட்டு
கணப்பொழுதில் ஓடிவிட்டாய்.
என் நெஞ்சம் 
தறி ஆகி தட்டிக்கொண்டே இருக்கின்றது.
அப்போது
இந்த சமுத்திரத்துள் பாய்ந்தவன் தான்.
பவளத்திட்டுகள் காயப்பட்டு போயின.
என் அவசரமும் ஆசையும் எனக்குத்தானே.
கடற்பாசிகள் ஊஞ்சல் கட்டின.
வண்ண வண்ண வரிமீன்கள் வால் மீன்கள்
குடை விரித்து நூல் பிரியும்
கூழுடலின் ஜெல்லி மீன்கள்
எல்லாம் என்னுடன் கை கோர்த்து ஆடவந்தன.
முகவரி கேட்டேன்.
சாயல் கேட்டேன்.
அஞ்சிறை முளைத்தாற்போல்
அவள் பளிங்குக்கால் உளைந்து நீந்திய‌
அழகிய சுவடு உரசி
கடலடியில்
அற்புத பிருந்தாவனம்
ஏதேனும் பதியம் ஆனதா
என்றும் கேட்டேன்.
தடயம் இல்லை.
முடியவில்லை.மூச்சு முட்டுகிறது.
கரை எங்கு இருக்கிறது.
ஆழம் ஆயிரம் ஆயிரம் அடிகள் இருக்குமே!
காலால் உதைத்து எம்ப முடியவில்லையே.
எப்படி?
எப்..எப்..எப்ப்"

"அடேய் அண்ணா!
க்ராஃபிக்ஸோடு குறட்டையா?"

சடக்கென்று
தட்டி விட்டுப்போனாள் தங்கை.

=====================================================ருத்ரா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக