திங்கள், 17 ஏப்ரல், 2017

(ஓங்குக அண்ணல் அம்பேத்கார் புகழ்!)

"அந்த கனத்த சட்டப் புத்தகம்"
=====================================================ருத்ரா.
(ஓங்குக அண்ணல் அம்பேத்கார் புகழ்!)


ஒரு சுதந்திரத்தின் கருவறையில்
இன்னொரு சுதந்திரத்தின் கல்லறையும்
கட்டிவைக்கப்பட்டிருந்த
விசித்திர  வரலாறு கொண்டது
நம் இந்திய தேசம்.
மனிதனை மனிதன் கைகுலுக்கிக்கொள்ளும்
மானிடப்பூவின் மாணிக்க மகரந்தங்கள்
இந்த உலகத்தின் காற்றையே
தூய்மைப்படுத்திக்கொண்டிருந்த காலகட்டத்தில்
இங்கு மட்டும் "தொட்டால் தீட்டு"
என்று அநாகரிகத்தின்
முடைநாற்றம் வீசிக்கொண்டிருந்ததே!
அதில் வெளிப்பட்ட சிந்தனைச்சீற்றத்தின்
விடியல் "உருவகமே" அண்ணல் அம்பேத்கார்!

மூவர்ணக்கொடியேந்தி சுதந்திரத்தின்
மூச்சுக்காற்றை முழங்கியவர்களின்
நரம்புப்புடைப்புகளில் எல்லாம்
நாலு வர்ணம் அல்லவா குதித்தோடிக்கொண்டிருந்தது.
தளை என்றால் தமிழில் "கட்டு"என்று பொருள்.
அப்படித் தளையில் தளைக்கப்பட்டு கிடக்கும்
கருஞ்சிறுத்தைகளின் கட்சியைத்தான்
தலித்துகளின் புதிய யுகமாய் திரட்டியவர் அம்பேத்கார்.
தலித் எனும் சிங்க மராட்டியனின் அந்தக்கவிதையில்
தமிழின் விடுதலைத்தாகமும் இருந்தது என்பது
இன்றும் நாம் காணும் உண்மை.

துப்பாக்கித் தோட்டாவுக்கு
பசுக்கொழுப்பா? பன்றிக்கொழுப்பா? என்று
மதக்கொழுப்பு கொழுந்து விட்டு எரிந்ததில்
ஒரு சிறு பொறியே
நம் நாட்டின் விடுதலைத்தீ வெள்ளத்தை
கர்ப்பம் தரித்தது..அதை
அற்பம் ஆக்க வந்ததே சாதீயின் ஆதிக்கம்.
சாதிக்கொடுமையை
சான்றோர்களே தவறு என உணர்ந்து கொள்ளச்செய்து
தன் ஓங்கி உலகளந்த கல்வியால்
சட்டமும் பொருளாதாரமும் கற்றுத்தேர்ந்த‌
மாமேதை நம் அம்பேத்கார்.
மேன்மை மிக்க
நம் முன்னாள் குடியரசு தலைவர்
அப்துல் கலாம் அவர்கள்
கனவு காணுங்கள் என்று
சரியாகத்தான் சொன்னார்.
இன்னும் தழல் வீசும் அந்தக்கனவே
நம் அம்பேத்கார் தான்.

வெள்ளயனுக்கு
"சிப்பாய் கலகம்" என்று
சின்னத்தனமாய் தெரிந்த அந்த நெருப்பு
பாரதியார் கவிதையில்
அக்கினிக்குஞ்சு அல்லவா!

வெந்து தணிந்தது காடு.
வேகாமல்
மானிட தர்மத்தை இன்னும்
சாகடிக்கப்பார்ப்பதே
சாதி மதங்கள்.
நாலாம் கிளாஸ் மாணவன்
ஏதோ "இம்போசிஷன்"எழுதுவது போல்
வருஷம் தோறும் வந்து போவது அல்ல‌
"அம்பேத்கார்" எனும் பெயர்.

இதன் கனலும் கனவுமே
இன்னும் வாக்குப்பெட்டியின் உள்ளே
மண்டிக்கிடக்கும்
நூலாம்படைகளை "தூய்மை"ப்படுத்த முடியும்
என்பதே இன்றைய யதார்த்தம்.
ஐந்தாண்டுக்கு ஒரு முறை நடக்கும்
தேர்தல் எனும் கும்பமேளாவுக்கு
"கரன்சியாபிஷேகம்"கொண்டு
கும்பாபிஷேகம் தடபுடல் படும்
நம் அரசியல் அவலங்களின் நோய் தீர்க்கும்
அருமருந்து ஆகுவது
"மானிட நேயப் பார்வை" மட்டுமே.
அம்பேத்கார் எனும் புதிய யுகம்
ஆளுயர மாலைகளுக்குள்
அமிழ்ந்து போவது அல்ல.
இந்த சமுதாயப்ரக்ஞையின்
ஞான சூரியன்
வாக்குப்பெட்டியில் உதயமாவதை
அதே வாக்குப்பெட்டியில்
அடைக்கப்பெட்டிருக்கும்
அஞ்ஞான மேகங்களே
மறைத்துக்கொண்டிருக்கின்றன.
சமநீதியின் பளிங்குத்தடாகத்தில்
முதல் கல்லெறிந்து
காயப்படுத்த முற்படும்
பால் தாக்கரே சிந்தனைகள்
நம் பாரதத்தை மீண்டும்
பாதாளத்தில் வீழ்த்த நினைக்கும்
பாதகங்கள் ஆகும்.
அம்பேத்காருக்கு ஆயிரம் அடியில் கூட‌
இவர்கள் சிலையெழுப்புவார்கள்.
ஆனால் அஸ்திவாரத்தில் இவர்கள் இடுவதோ
இட ஒதுக்கீட்டின்
கபாலங்களும் எலும்புக்கூடுகளும் தான்.
வாக்குப்பெட்டியை நிரப்ப‌
தாற்காலிகமாய் கைகோர்த்துக்கொள்வார்கள்
இந்த கருப்புஜனங்களுடன்.
ஆனால் சாதிமதங்களின் சாக்கடை கங்கைகளில்
வீசும் இவர்களின் அரசியல் நாற்றத்தை
கண்டு கொள்ளுங்கள்.
அதனால் அனல் மிகு சீற்றத்தோடு
உச்சரிக்கப்பட வேண்டிய பெயர்
"அம்பேத்கார்"
கங்கையைக் கொண்டு
கண்ணில் கண்டதையெல்லாம்
சுத்தப்படுத்திய
அந்த சனாதனிகளின் கங்கையை
சுத்தப்படுத்தியது
அந்த கனத்த சட்டப்புத்தகம் மட்டுமே.
அந்த கறுப்புத்தங்கத்தின்
கை பட்ட புத்தகம் அல்லவா அது!
ஓங்குக அண்ணல் அம்பேத்கார் புகழ்!

============================================ருத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக