வியாழன், 27 ஏப்ரல், 2017

ஞாழல் பத்து

ஞாழல் பத்து
=============================================ருத்ரா இ பரமசிவன்.

ஐங்குறு நூறு தமிழின் தொன்மை மிக்க புதுக்கவிதைகள் போன்றவையே.சொல் ஆக்கம் அதன் பொருள் அதில் பொதிந்த கற்பனைச்செறிவு எல்லாம் படித்து படித்து பெரு மகிழ்வு அடைய தக்கவை.இதில் நெய்தல் திணை சார்ந்து நூறு செய்யுட்கள் ஆக்கியவர் அம்மூவனார்.அவர் பெயரில் ஒளிந்திருக்கும் பொருளும் வழக்கும் தமிழின் "செம்மை மற்றும் தொன்மை" சாற்றும் தன்மையுடையன.
மூ என்றால் மூன்று என்ற பொருள் யாவரும் அறிந்ததே.ஆனால் மூ என்று தனியெழுத்தே தமிழின் தொன்மை சுட்டுகிறது.அழகிய சிறந்த அறிவார்ந்த மூத்த குடிப்புலவன் என்று தான் "அம்மூவன்" என்பதற்கு
நாம் பொருள் கொள்ளவேண்டும்.மூவேந்தர்கள் என்று "மூன்று" அரசர்களோடு முடக்கிக்கொள்வதல்ல அப்பெயர்கள்.காலத்தால் மூத்த இனத்தின் அரசர்கள் என்பதே பொருள்.தமிழ் நாட்டில் "மூதேவி" என்றால் துடைப்பம் கொண்டு விரட்டி விட்டு ஒரு ஸ்ரீ யைச்சேர்த்த "சீர் தேவி(இது தமிழ்ச்சொல் தான்)யை நடு வீட்டுக்கே கொண்டு வைத்துக்கொள்ளும் வழக்கம் ஏன் வந்தது.இவள் செல்வம் கொண்டு வருவாள்.அவள் வெறுமே தொன்மை அறிவு மட்டுமே தானே தருவாள் என்ற அந்தக்காலத்து "பணப்பேராசை" எனும் டாஸ்மாக் தனம் நம்மிடையே நுழைந்ததால் இருக்கலாம்.மனிதர்கள் செல்வச்செழிப்போடு வாழ வேண்டும் தான்.அதற்காக மூத்தோர்கள்
மூளி அலங்காரிகளாக வெறுக்கப்படும் கலாச்சாரம் எப்படி நுழைந்தது? "மூதேவி" என்றால் வறுமை அல்லது தரித்திரம் வந்து விடும் என்று  அடித்த‌ கோடாங்கியின் ஒலி இன்று வரை எதிரொலிக்கிறது.சரி போகட்டும்.
அம்மூவன் எழுதிய அரிய தமிழ்ச்செய்யுட்கள் கண்டு இன்புறுவோம்.


ஞாழல் பத்து
==============
"எக்கர் ஞாழல் செருந்தியோடு கமழத்
துவலைத் தண்துளி வீசிப்
பயலை செய்தன பனிபடு துறையே."....(செய்யுள்.141)



மூன்று வரிகளில்
அந்த புலிநகக்கொன்றையும்
செருந்தியும்
மலர்கள்
என்று பெயர் சொல்லிக்கொண்டு வந்து
அவள் உள்ளத்தையே
பெயர்த்து எடுத்து
காதலில் கடைந்து
வதை செய்ததை
காட்டுகின்றான் அம்மூவன்.
பயலை என்பது
பசலை என்று
இடைப்போலியின் இலக்கணம் தந்தாலும்
அவள் உடலில்
மாயக்கைகள்
மருதாணிக்கீற்றுகள் (மெகந்தி)போல்
சித்திரம் காட்டி
சித்திரவதை செய்வது எல்லாம்
துவலைத் தண் துளி வீசும்
பனிபடுத் துறைவன் தானே!
அந்த "துவலைக்குள்" அல்லவா
அம்மூவன்
அழகாக நெய்யப்பட்டிருக்கிறான்.
"நெய்யப்பட்டிருக்கிறானா?"
அவன் தானே
அச்செய்யுளை நெய்தது?
அவன் நெய்திருக்கலாம்
அதில் அவளது "பசலையின்"
தீச்சுடும் வரிகளில்
ஒரு துன்ப "டிசைனை"
கோர்த்து நெய்தது
அந்த பிரிவுத்துயரின்
வலியும் வேதனையும் தானே!
"துவலைத் தண்துளி" என்று
பாம்பே டையிங்
தேங்காய்ப்பூத்துவாலையை
அலைத்துளியாய் வீசி
அம்மூவன் அங்கே
போர்த்த நினனத்தாலும்
தலைவியின் உணர்ச்சியே
அங்கு கடல்.
அங்கு அலைகள்.
===============================================ருத்ரா
20 மார்ச் 2015 ல்  எழுதியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக