வெள்ளி, 24 மார்ச், 2017

தி.ஜானகிராமன்

தி.ஜானகிராமன்
====================================ருத்ரா இ.பரமசிவன்

எழுத்துக்களில்
தன் பேனாவை அளைந்து அளைந்து
இனிப்பு பிரபஞ்சத்தை
பிசைந்து காட்டியவர்.
தன் உள்முகங்களை
அவற்றின் துல்லிய நரம்போட்டங்களை
பாத்திரங்கள் ஆக்கியவர் .
நான் படித்து அவர் எழுத்துகளில்
கரைந்து போனேன்.
மீண்டும் உருண்டு திரண்டு
வரும்போது
கும்பகோணக்காவிரி மூச்சுகளாய்
இசையின் மேளகர்த்தா ஜன்ய ராகங்களாய்
அந்த காகித உடல்களில்
உயிரெழுத்து மெய்யெழுத்துப் புணர்ச்சியாய்
புல்லரித்துக்கிடப்பேன்.

"அம்மா வந்தாள்"

அந்த நாவல் ஒரு தீ.
அவர் அதில் வேதத்தை எரித்த தீயாய்
அல்லது
வேதத்தில் எரிந்த தீயாய்
"காமத்துப்பாலை"
ஆகுதி செய்திருக்கிறார்.

"அலங்காரம்" "அப்பு" "தண்டபாணி"
இந்த மூன்று பாத்திரங்களில்
வழிய வழிய நிறைத்திருக்கிறார்
நம் தினவுகளை
அதன் உணவுகளை
நம் நிமிண்டல்களை
அதன் சீண்டல்களை...
வேதவித்து என்று
கும்பிட்டு கன்னத்தில் போட்டு
ஒரு புனிதம் பூசினாலும்
அது
சமுதாயங்களின்
இந்த புண்களுக்கு புனுகு
தடவுவது போல் தான்
என்று குமைந்து போகிறார்.

பெண் என்பவள் எப்போதும் பெண் தான்.
பொஸ்ஸெஸிவிஸம் அது இது என்று
ஆண் தன் "காமத்துப்பாலை" மட்டும்
காய்ச்சி காஃபி போட்டு குடித்துக்கொள்வதில்..
அந்த "ஃபில்டர் காஃபியில்"..
வடிகட்டிய போலித்தனம் மட்டுமே
ஒரு வெறியின் சுவையாய் இருக்கிறது.
அவள் தன் தவறுகளை
வேதத்தில் பஸ்பம் செய்து
தன் ஆத்மாவை
ஆவியாக்கிக்கொள்ளத் துடிக்கிறாள்.

அப்பு என்ற மகனுக்கு
அந்த வேதமே அர்த்தம் அற்ற குப்பையாய்
போய்விடுகிறது.
குப்பை எப்படி குப்பையை எரிக்கும்?
தண்டபாணி என்ற அந்த கணவரோ
உபனிஷதங்கள் உருவகிக்கும்
அந்த "இரண்டு பட்சிகளாய்"இருக்கிறார்.
ஒன்று
உலகம் என்ற வாழ்க்கைப்பழத்தை புசிக்கும்.
மற்றொன்று
அந்த பழத்தைப் பார்த்துக்கொன்டே
பேசாமல் இருக்கும்.
இரட்டைக்கழுத்துடைய பட்சியா அவர்?
அல்லது
ஒற்றையா இரட்டையா எனும்
தத்துவ விளையாட்டில்
முற்றி முகிழ்த்த அத்வைத பட்சியா?
தவறுகளும்
ருசி மிகுந்த வாழ்க்கையின்
உள்முகம் எனும்
திருமுகத்தை தரிசித்து நிற்பவர்.

பிரம்மமாவது ஒன்றாவது?
வாழ்க்கையின் உள்ளே நின்று
"வெளியை" உணர்வதும்
வெளியே நின்று
"உள்ளே" கசிவதும் ஆன‌
அற்புத பாத்திரம் தண்டபாணி.

இந்த நாவல்
எழுத்தின்
ஏதோ ஒரு நாபிக்கமலத்தின்
அபூர்வ மகரந்தங்களை
இந்த பிரபஞ்சம் எங்கும்
தூவுகிறது.

===================================================================கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக