வியாழன், 2 மார்ச், 2017

பெண்மை போற்றுதும்! பெண்மை போற்றுதும்!

பெண்மை போற்றுதும்! பெண்மை போற்றுதும்!
==================================================ருத்ரா
அடி முடிக்கவிதை (அந்தாதி)


ஆவி அவிழ்த்த அருமலர் முல்லை
ஆகாயத்தையும் வருடிச் சிரித்தது.
புள்வரிசை அணிவகுத்து சென்றது.
பெண்ணின் அமுதச் சிரிப்புக்கு
இயற்கையின் இனிய அடையாளம் இது.

இது என்ன மாயம்? வியந்தான் பிரம்மன்.
வடிவம் மட்டுமே நான் படைத்தது.
வடிவத்துள் ஒரு உயிர்ப்படிவம்
யார் படைத்தது? யார் படைத்தது?
விடைக்குள் கருவானதே ஒரு கேள்வி தான்!

கேள்வி தான் ஞானம் விரித்தது.
அறிவுத்தீ ஆயிரம் வளர்த்தும்
தீக்குள் ஒளித்த ஒரு சுவை உண்டு.
பொறிகள் வைத்த பொறியில் சிக்கா
சித்தன் கூட கலங்கியது உண்டு.

உண்டா? இல்லையா? கடவுள் இங்கு என‌
தூணையும் பிளந்து துரும்பையும் பிளந்து
வாதம் செய்தும் புதிர் அவிழவில்லை!
குடல்கள் கிழிந்தது தான் மிச்சம்...சிங்கம்
சாந்தமாய் அமர்ந்து யோகம் செய்ய‌
பெண்மையின் அணைவே அங்கு வந்தது.

வந்தது தெரியும்.போவது எங்கே தெரியாது!
இரண்டும் தெரிந்த கவிதை உண்டு அதுதான்
இங்கே பெண்மை எனும் பெருங்காப்பியம்.
காதலாய் வந்தது பெண்மை மலர்ந்தது.
தாய்மை வந்ததும் கவர்ச்சிகள் போனது!

போனதெல்லாம் போகட்டும் என் சொக்கத்தங்கம்
கையில் உண்டு.அந்த மழலை வைரக்கிம்பர்லி
கதிர்க்கும் பூக்களின் நந்தவனமே என் சொந்தவனம்!
நரகம் எனும் பிரசவத்தில் நான் கண்டதே சொர்க்கவனம்!
முற்றுப்புள்ளியல்ல நான்.நீண்ட வாக்கியமே என் அன்புவனம்!.

அன்புவனத்துள் வளைத்துக்கொண்டாள் பெண்!
கோடி கோடி பிரபஞ்சம் புரிந்துகொண்டது அவளை!
எந்த மொழியும் இன்றி....எந்த அர்த்தமும் இன்றி!
அவள் நீட்டிய உயிர்ச்சங்கிலிப் பொன்னிழையில்
ஆதாரம் உண்டு!வேறு சேதாரம் அங்கு ஏதுமில்லை!

ஏதுமில்லை இது வெறுங்கூடு
குஞ்சுகள் எல்லாம் பறந்த பின்னே.
அப்போதும் அன்பின் துடிப்பு எங்கணுமே!
ப்ரோட்டான் எலக்ட்ரான் புரிந்துகொள்ளும்
இந்த வக்கிர பிண்டங்களுக்கே வெறி பிடிக்கும்.

வெறி பிடிக்கும் பொருளாதாரம் இங்கு
வெடி வைத்து தகர்த்தது கூடுகளை.
மானுடம் இறந்த சவங்களிலா
வானை வருடும் இந்தக்கட்டிடங்கள்?
பெண்மை போற்றுதும்!பெண்மை போற்றுதும்!
தாய் மண்ணே மனிதம் காக்கும் என‌
உண்மை போற்றுதும்!உண்மை போற்றுதும்!

==================================================




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக