வியாழன், 23 மார்ச், 2017

இவர்கள் மறுபடியும் ...


இவர்கள் மறுபடியும் ...
====================================================ருத்ரா

இவர்கள் மறுபடியும் 
க்யூ வரிசையில் நிற்கப்போகிறார்கள்.
தேதி குறித்தாகி விட்டது.
செங்கோல் ஏந்தி ஆள்வதன் அடையாளமாய்
மின்னணுப்பொறியில்
பட்டனைத் தட்ட
இந்தப்பாடு படுகிறார்கள்.
இவர்கள் ஏந்தியதாய் நினைக்கும்
அந்த செங்கோல்
ஒப்பந்தக்காரர்களின் டெண்டர்களிலும்
அவர்களின் பணக்குவியல்களிலும்
தோலைந்தே போனது.
மறுபடியும் மறுபடியும்
இவர்கள் க்யூவில் நின்று
தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவில் எங்கும்
இந்த ஈனத்தனம் இல்லை
தமிழ்நாட்டைத்தவிர.
கற்றை நோட்டுகளை கைகளில் திணித்து
ஜனநாயகத்தை கசாப்பு செய்துகொள்கிறார்கள்.
வெட்ட வெட்ட
சொட்டும் ரத்தங்களோடு
தலைகள் இழந்து  முகங்கள் தொலைந்து
இன்னமும் க்யூவில் நின்றுகொண்டிருக்கிறார்கள்.

கியூவில் நின்றுகொண்டிருப்பவர்களே!
இந்த சில நிமிடங்களை
உங்கள் அறிவார்ந்த சிந்தனையில்
அசை போட்டு பாருங்கள்.
திராவிடம் என்பது நம் ஒளி பொருந்திய பாதை.
அதை ஊழல் சகதியால்
சதுப்பு நிலக்காடாய் ஆக்கியவர்களை
நாம் தண்டித்தே ஆகவேண்டும்.
அதே சமயத்தில்
"கைபர்" கணவாய் வழியே வந்த
அந்த சாக்கடை வெள்ளத்தின்
மிச்ச சொச்ச சாதி மத
முடை   நாற்றங்களையும்
அழித்தே ஆக வேண்டும்..

தமிழும் தமிழ் மக்களும்
மூடத்தனத்தின் மதத்தில்
ஊறிப்போய்
ஒரு மதவெறி அரக்கன் தன்  பின்னே
முதுகு சுரண்டி ரத்தம் குடிக்க
மந்திர உச்சாடனங்களில்
பக்தி எனும் "சோம பானம்"நிரப்பிய
கிண்ணங்களோடு வருவது தெரியாமல்
தள்ளாடி நடக்கும் மயக்கங்கள்
தெளிய வேண்டும்.
ஊழல் ஒழிய வேண்டுமானால்
அது எங்களால் தான் முடியும்
என்ற பொய்ப்போதையை நுரைக்கவைத்து
தமிழ் நாட்டை விழுங்க வந்திருக்கும்
அந்த பூதத்தின்
அணி வேரே "ஊழல் சிந்தனைகள்" தான்.

காதல் எரிக்கப்பட வேண்டும்.
அதிலும் தாழ்ந்த சாதி உயர்ந்த சாதியை
காதலிக்கும்
இதயங்களை கசக்கிப்பிழிந்து
காளிகளுக்கு பலி கொடுக்க வேண்டும்.
நான்கு வர்ணத்தையும் கூட
டிஜிட்டல் யுகத்தின் வர்ணம்பூசிய
கொலை ஆயுதமாக்கி
மானிட மாண்பு எனும் மதமற்ற
இந்த யுகம் மீது வீசவேண்டும்
என்று ஒரு கூட்டம்
வெறி வளர்த்து வருகின்றது.
இந்த கூவத்தை மடியில் கட்டிக்கொண்டு
கங்கா ஜலம் தெளிக்க புறப்பட்ட
அந்த கூட்டம் சிதறடிக்கப்படவேண்டும்.
"கங்கை" என்றால் அதில்
பிணங்களும் மிதக்கும்
முதலைகளும் கிடக்கும்.
புனிதம் சொல்லி தமிழைப்
புதைக்கப்பார்க்கும்
"மனு ஸ்மிருதி"யின் மயான காண்டத்துள்
மடிந்து போகாதீர்கள்.
இடைத்தேர்தல் தானே என்று
அந்த சாதி மத கோரைப்பற்களின்
இடைவெளிக்குள் மாட்டிக்கொண்டு  விடாதீர்கள்.
ஊழலை  தூண்டில் புழுவாக்கி
நம் ரத்தக்குளத்தில் மீன் பிடிக்க நினைக்கும்
கண்ணுக்குத் தெரியாத அந்த
ஊழல் அரக்கன்
கார்ப்பொரேட் பொருளாதார "வேதம்"சொல்லி
புறப்பட்ட சூழ்ச்சியை
பொடிபொடியாக்குங்கள்.
மூன்று சதவீதமே இருக்கும்
மேட்டுக்குடியினர்
மொத்த வளர்ச்சியையும் விழுங்கப்பார்க்கும்
ஒரு பகாசுரயுத்தியே
அவர்களின் "வளர்சசி" மந்திரம்!
வாக்குகளை ஏந்திக்கொண்டு வரும்
வெறும் வளையல் பூச்சிகள்  அல்ல  நீங்கள்!
கோடிக்கால் பூச்சிகளாய்  ஊர்ந்து வரும்
உங்கள் கியூவில்
சமுதாய மாற்றத்தின் புயல்சுவடுகளும்
பொதிந்து கிடப்பதை
எப்போது நீங்கள் காட்டப்போகிறீர்கள் ?

அறிவாயுதம் ஒன்றே உங்கள் கையில்.
அதை பாமரத்தனத்தின் "அர்ச்சனைக்காடுகளில்"
மழுங்கடித்துக்கொள்ளாதீர்கள்.
உங்கள் கூரிய அறிவியல் ஆயுதம்
இந்த இருட்டு சித்தாந்தங்களையும்
வேதாந்தங்களையும் ஒழித்து
ஒளி படைக்கவேண்டும்.
நம் தமிழின் வழி படைக்க வேண்டும்.

================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக