திங்கள், 6 மார்ச், 2017

குரல்கள்

குரல்கள்
=======================================ருத்ரா

இந்த மண்ணின் மக்களுக்கு
அப்படி என்ன கோபம்?
எரிபொருள் வளத்தின்
கருப்புத்தங்கம் பெரும் சுரங்கமாய்
அடியில் கிடப்பதை
பயன்படுத்திக்கொள்ள‌
ஏன் தயங்குகின்றனர்?
வேளாண்மை மறைந்து போய்
தமிழ்ப்பாலைவனம் என்ற ஒன்று
வந்து விடுமோ என்று
அஞ்சுகிறார்களோ?
அவர்கள் அச்சம் புரிகிறது.
எல்லாம் தோண்டியெடுத்து
நரசிம்மம் கிழித்துப்போட்ட‌
வெறும் குடல்களாய் சரிந்து கிடப்போமோ
என்ற ஒரு உள் அச்சம்
ஒன்று இங்கே
"கிணறு வெட்ட" பூதம் கிளம்பின கதையாய்
புகைமூட்டம் போட்டுவிடுமோ
என்ற திகில் அலைகள் இங்கே
கவ்விக்கிடக்கிறது.
இன்று "வளர்ச்சி" என்று
பொருளாதாரத்தின்
"வெல்த் ஆஃப் நேஷன்ஸ்"
என்று "ஆடம்ஸ்மித் கோட்பாடு"
என ஆயிரம் கோட்பாடுகள் காட்டிய போதும்
டெல்லியின் இறையாண்மை
என்றொரு "ப்ரம்ம ராட்சசம்"
நாளை நம்மைக் குதறிச்சிதைத்து
கும்பாபிஷேகம் நடத்தி
உலக கார்ப்பரேட்டுகளின்
உறிஞ்சல்களுக்கு
நம் இனிய தமிழ் இனத்தை
பலியாக்கி
நம்மை தடம் இல்லாமல் இடம் இல்லாமல்
அழித்துவிடுவார்களோ
எனும் அச்சமே
இங்கு உள்ளுறைந்து கிடக்கிறது.
ஒரு சிங்களநாட்டின் "இரையாண்மையைக் காக்க"
லட்சம் தமிழ்ப்பிணங்களை
காவு கொடுத்த‌
ஒரு "சாரே ஜஹா(ம்)ஸே அச்சா"
புண்யபூமி வேறு எங்கேயும்
காணமுடியாது!
இந்த மௌனபயத்தைப் போக்கும்
உறுதிமொழிகள் இங்கே பூக்காத வரை
இந்தக்குரல்கள்
அவிக்கப்படவே இயலாது!

=================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக