ஞாயிறு, 12 மார்ச், 2017

ஆர்.கே. நகர்

ஆர்.கே. நகர்
=================================ருத்ரா

பட்டோலை வாசித்தாகி விட்டது.
தேதி குறிச்சாச்சு.
ஒருவர் இறந்ததால் ஆன‌
வெற்றிடத்தை நோக்கி
மீண்டும் புயல்..சூறாவளி.
அரசு எந்திரம் அப்படியே இங்கு
கொட்டிக்கவிழ்க்கப்படும்.
நம் ஜனநாயகம் எப்பவோ "மரத்துப்போச்சு"
இரண்டு ராட்சசத்தேர்களாய்
வந்து நின்ற அந்த "கன்டெய்னர்" சுவடுகள் பற்றி
கருப்புப்பண எதிர்ப்பு சுநாமிகள் கூட‌
கண்டு கொள்ளாமல்
கண்ணை மூடிக்கொண்டு ஓடியே போய்விட்டன.
நம் புண்ணிய பூமியில்
"ஜனநாயக"சாமிகள்
எங்கு வேண்டுமானலும்
எப்படி வேண்டுமானலும்
அவதாரம் எடுக்கும்.
அந்த ரூபமே அலங்கோலமாக இருக்கும்.
வாய் இருக்கும் இடத்தில் வால் இருக்கும்.
கண்கள் இருக்கும் இடத்தில்
புண்கள் இருக்கும்.
எட்டுகை பதினாறு கால்
குதிரைக்கழுத்து
பன்றி முகம்
இன்னும் எப்படி வேண்டுமானலும் இருக்கும்.
ஜனநாயகம் கிரேக்க நாட்டுக்காரன் சிந்தனை அல்ல.
அப்போதே "குட ஓலை" கண்டுபிடித்தது
நாம் தானே என்று
பெருமை பேசுவதில் குறைச்சல் இல்லை.
சாக்கடையாய் ஆன‌
லஞ்சத்தையும் ஊழலையும் காப்பாற்ற‌
ஆயிரம் பால்குடங்கள் எடுப்பதும்
நாம் தானே!
இனி
அந்த புனிதத்துக்கு தோப்புக்கரணம்
போட்டுவிட்டு
போய் முடங்கிக்கொள்ளவேண்டும்.
அடுத்த தடவை கியூவரிசைக்கு
அழைக்கும் போது
ஆஜர் ஆனால் போதும்.
எதையும் ஏன் எதற்கு எப்படி
என்று கேள்விகள் கேட்கும்
மூளையையும் சிந்தனையையும் மழித்துவிட்டு
தயாராய் இருங்கள்.
ஆணைய‌விதிகள் அமுலுக்கு வரட்டுமே!
இந்த ஆகாயம் என்ன கிழிந்தா போய்விடும்?
ஏற்கனவே கந்தலாய்ப்போனவர்கள்
இனிமேலும் கந்தலாய்ப் போக வழியே இல்லை.
எல்லாமே "கூவாத்தூர்"தொகுதிகள் ஆனபின்
இன்னும் எதற்கு
அந்த தொகுதி இந்த தொகுதி என்று பெயர்கள்?
அந்த அகன்ற ஊழல் விருட்ச‌ங்கள்
எல்லாவற்றையும் அடக்கி நிற்கும்
ஒரு "போன்ஸாய்" மரமே
இந்த "ஆர்.கே" நகர்.

======================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக