திங்கள், 6 மார்ச், 2017

அந்த விளிம்பு..  






உன்னோடு தொட்டுபிடிச்சு விளையாட ஆசை.

எங்கெல்லாம் ஒளிந்து கொள்வாய் என்று

எனக்குத்தெரியும்.
என் கணுக்கால் பூ மயிர்கள் கூட‌
ஆன்டெனா ஆகி விடும்
உன்னை கண்டுபிடிக்க.
உன் கை வழ வழ வென்று
கோதுமை நாகம் போல்
அந்த கல் உருளையைச்சுற்றிக்கொண்டு
மூசு மூசு என்று மூச்சிரைத்து
ஒளிந்து கொண்டிருக்கும்போது
உன் வளையல்களோடு
கரிய பொன் கீற்றுகளாய்
உன் முன்கையின் வெல்வட் மயிர்கள்
உரசுவதை வைத்தெ
கண்டு பிடித்து விடுவேன் நான்.
வேண்டுமென்றே
அந்த குத்துக்கல்லின் ஊசி முனையிலிருந்து
குரல் கொடுப்பாய்.
திகில் கொண்டு துடிப்பேன்.
டேய் தடியா
இது அவள் எனக்கு வைத்த செல்லப்பெயர்.
அதை ஒலித்து ஒலித்து
உரக்கக்கத்துவாய்.
உன் எதிரொலி அடுக்குகள்
பிய்த்து எறியும் ரோஜா இதழ்கள் போல்
என் மீது "மழை"க்கும்.
ஒன்று இரண்டு..என்று
நான் கண்களைப் பொத்துவது போல்
நடிப்பேன்.
நான்"கள்ளாட்டை" ஆடுகிறேன் என்று
உன் கண்களை
ஊடுருவிக்கொண்டு என் கண்களோடு
கலந்து கொண்டு விடுவாயே..
அப்புறமும்
நீ எப்படியோ ஓடி வந்து
என் முதுகுப்புறம் ஒளிந்து கொள்வது போல்
ஒட்டி இழைந்து நிற்பாய்.
நூறு நிலவுகளைக்கொண்டு
சோப்பு செய்து என் முதுகு தேய்த்து
என்னை நீ
குளிப்பாட்டுவதாய் நான்
களிப்புக்குமிழிகள் பூத்து நிற்பேன்.
திடீரென்று
சத்தம் காட்டி எதிரே வந்து
கலவரப்படுத்துவாய்.
நானும் பயந்தது போல்
முகம் வெளுத்து வெட வெடத்து
முறுவல் காட்டுவேனே.
அன்றொரு நாள்
அந்திநேரம்
உன் மீது அழகாய்
ஒரு குட்டைப்பாவாடையாய்
குழைந்து நெளிந்து அசைந்தது.
ஒளிப்பிழம்பு உனக்குப்  பின்னால்
கொண்டைத்திருக்கு சூட்டியது போல்
சூரியன் உன் பின்னே
ஹேர்பின் இல்லாமலேயே
உன் ஜடையில் சொருகி
இளஞ்சிவப்பாய்
வானமெல்லாம் சிரித்தான்.
"டேய்
ஒழுங்கா கண்ண மூடுடா
இப்ப என்னைக்கண்டுபிடி பார்க்கலாம்"
முகம் காட்டிக்கொண்டு
பின் புறம் நடந்து நடந்து நகர்ந்தாய்.
வேகமாக நகர்ந்தாய்.
அந்த விளிம்பு..அந்த விளிம்பு
அவள் பின்னே....
என் அரைகுறை கண் மூடலில்
பார்க்கும் போது...
ஐயோ..
எங்கே அவள்?

==============================================================
படம்..நானே எடுத்தது..அமெரிக்கா அரிஸோனாவில் "கொலராடோ ஆறு"











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக