புதன், 1 மார்ச், 2017

பெண்ணே !பெண்ணே !
====================================ருத்ரா


கோழி கூவியது என்று
திடுக்கிட்டு முழித்துக்கொள்வாய்.
பால் பாக்கெட்
வாசல் பை தொட்டிலில்
விழுந்து கிடக்கும்.
அக்கினிக்குஞ்சின் சிறகு விரித்து
பால் காய்ச்ச‌
நீ தீக்குச்சி கிழிக்கும்போது தான்
சூரியன் கூட கிழக்கில்
தீப்பற்றிக்கொள்ள 
அவசரம் அவசரமாய் 
கொட்டாவி முறித்துக்கொண்டு
அந்த பனமர ஓலைகளுக்கிடையே
கசிந்து வழிகிறான்.
உலகத்துக்கு சாவி கொடுக்கவே தான்
நீ கண்விழிக்கிறாய் என‌
உனக்குள் அல்காரிதம் போட்டது யார்?
தாய்மையின் ஒரு தனிப்பட்ட‌
ஒரு பூலியன் அல்ஜீப்ரா
உன்னை இயக்கத்தொடங்கி விட்டது.
மார்கழியில்
சாணிப்பிள்ளையாருக்கு
பூசணிப்பூ குடை நடுவதில் இருந்து
பொங்கல் நாள் பூரிப்பில்
அந்த பூமிப்பெண்ணும் நாணம் கொண்டாள்
என்று அவளுக்கு
"மெகந்தி யிட்டு"
புளகாங்கிதம் அடையும் வரைக்கும்
நீ வெறும்
பெண் மட்டும் அல்ல!
இந்த மண்ணின் கண் நீ.
அதோ வருகிறான் பார்!
உன் மறுபாதி!
ஆவ் என்று கோட்டாவி எழுப்பி
கையில் பேப்பருடன்
"காப்பி ரெடியா" என்று கேட்டுக்கொண்டு.
இதோ என்று
ஒரு புன்முறுவலுடன் நீட்டுகிறாய்.
காஃபியில் ஆவி பறக்கிறது.
அந்த காஃபி அவன்.
ஆனால் அந்த ஆவி   நீ !

===============================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக