செவ்வாய், 21 மார்ச், 2017

பரிணாமம் (3)

Inline image 1

பரிணாமம் (3)
==================================================ருத்ரா இ பரமசிவன் 

கழுத்தா சுளுக்கிக்கொண்டது?
இல்லை ஊடலா?
எங்கே ஓடுகிறாய்.
அழகே வா! அருகே வா!
கால ஒட்டத்திற்குள்
ஊடலின்  வர்ணம் என்ன? நிழல் என்ன?
வாழ்க்கையின் நெருடல்களில்
வர்ணங்களே மரணங்கள்.
அழகான 
மீன் கொத்திப்பறவைச்சிறகுகளின்
வர்ணங்களில்
மீனின் மரண எழுத்துக்கள்
பொறிக்கப்பட்டிருக்கின்றன.
வாத்துகளின் சிறகுகளில்
பிரபஞ்ச காற்றின் மகரந்தங்கள்
ஒட்டி ஒட்டி உதிர்கின்றன.
"ஹம்ஸோபனிஷதம்" தொடர்கிறது.
நீரலைகளில் வட்டங்கள்..சுருள்கள்...
ஒரு வாய்க்குள் இன்னொரு வாய்..
அதனுள்ளும் இன்னும் சிறிதாய் வாய்கள்.
வாய்களின் பரிணாமத்தில்
வயிறுகளின் பரிணாமம்.
சொல்கள் வரும் வாய்களில் வயிறுகளும்...
வயிறுகள் நிறைந்தபின் வரும்
"சுகினோ பவந்து"களும்...
உயிர்களுக்குள் உயிர்களாய்
சுருட்டி சுருட்டி வைக்கப்பட்ட‌
உயிர்களில்
எது பிரம்மம்?
எது அபிரம்மம்?
நிர்பிரம்மமே பிரம்மமாய்
எங்கும் பிம்பம் காட்டுகிறது.
கண்ணாடியின்
முன்னும் பின்னும்
உருவமே இல்லை.
எப்படி இந்த பிம்பம்?
எதற்கு இந்த கும்பாபிஷேகம்?
பகவத் கீதை விஸ்வரூப தரிசனம்
பெரிய பல்லாய்
பெரிய வாயாய்
நீளும் அகன்ற நாக்கில்
எல்லாவற்றையும் சுருட்டுவனவாய்
மரணத்தின் பிம்பம் இது.

லேலிஹ்யஸே க்ரஸமான ஹ ஸமந்தாத்

உதடுகளால் நாக்கினால் சவைத்து சப்புக்கொட்டி
எல்லாதிசைகளையும் கடித்துக் குதறி விழுங்கி

லோகான்ஸமக்ரான்வதனைர்ஜ்வலத்பி

உலக உயிர்களையெல்லாம் ஒன்றாக‌
நெருப்பு வழியும் வாய்க்குள் போட்டு

தேஜோபிராபூர்ய  ஜகத்ஸமக்ரம்

நெருப்பால் நிரப்பி எல்லாஉலகங்களையும்

பாஸஸ்தவோக்ராஹ ப்ரதபந்தி விஷ்ணோ

வெப்பக்கதிர்களினால் உக்கிரத்தோடு சுட்டெரிக்கும்
விஷ்ணுவே! நீ அழிவா? அழகா? (10.30)

இவர்கள்
ஆயிரம் நாமங்களில்
உன் அடியில் விழுந்துகிடக்கும் ரகசியம்
இப்போது அல்லவா தெரிகிறது.

பிரபஞ்சமே நடத்தும் படுகொலைகளுக்கு
அர்ஜுனனே...அலிபி.

மதுரை சித்திரைப்பொருட்காட்சியில்
இப்படித்தான்
நெளிந்து நெளிந்து கிடத்தியிருந்தார்கள்
கண்ணாடியை.
எரியும் சுடர் இப்படித்தான்
பார்ப்போர்களை
விழுங்கி விழுங்கி பயமுறுத்தியது.

இருப்பினும்
வியாஸனின் அற்புதப்படப்பிடிப்பு இது.
வாத்துகள்
அலகுகளில் கிச்சு கிச்சு மூட்டிக்கொண்டன.

============================================================

ஆகஸ்டு 10   2014 ல் எழுதியது.


2014-06-28_10-26-05_527.jpg

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக