சனி, 25 மார்ச், 2017

உலக கவிதைகள் தினம்

உலக கவிதைகள் தினம்
==============================================ருத்ரா இ பரமசிவன்.


உலக கவிதைகள் தினம் ஆயிற்றே!
என்ன எழுதலாம்?
பேப்லோ நெருதாக்கள் எழுதாதா?
ஒரு புரட்சியின் பூவுக்குள்
தன் உயிர் மகரந்தங்களை பெய்து
தன் சொல்லுக்குள் எரிமலையாய்
அவன் தரிக்காத கவிதைக்கர்ப்பமா?
ரவீந்திரநாத தாகூர்
அந்த சொற்கூட்டுக்குள்
அடைக்காத சொர்க்கங்களா?
டி.எஸ் எலியட் உருவாக்கிய
சோளக்காட்டுப்பொம்மை மனிதனுக்குள்
திணிக்காத நெருப்புக்கடலா?
ஏன்
நம் வைரமுத்துக்களின்
தமிழுக்குள் இல்லாத கிம்பர்லிகளா?
நேற்று தான் இறந்தான் என்று சொல்கிறார்கள்!
இன்றும்
புதிது புதிதாய்
கவிதையின் கன்னிக்குடம் உடைத்து
சொல் மடை திறந்து கொண்டிருக்கிறானே
அந்த நா.முத்துக்குமார்கள்
இசையில் தராத இன்பப்பிரசவ வலிகளா?
கண்ணதாசனின்
ஒரு பேனா சொட்டுக்குள்
அலையடிக்காத செந்தமிழ்க்கடல்களா?
வாலி எனும்
வார்த்தைகளின் வானவில்
எய்யாத வர்ண அம்புகளா?

இன்னும் பட்டியல் நீட்டினால்
நாலு பிரபஞ்சத்தை வலம் வரலாம்.
மனிதனின்
அறிவு வியர்த்த போது
விஞ்ஞானம் எல்லாவற்றையும் ஆண்டது.

மூளைக்கபாலத்துள்ளும்
மூண்டெரியும் மார்க்சிஸ சிந்தனை அணுக்கள்
சமுதாயக்காவியம் படைத்துத் தந்தது!

"அக்னிமீளேம் புரோகிதம்"என்று
முதல் கவிதை வரியைத் தந்தானே
அந்த ரிஷி!
அவனுக்குத்தெரியுமா
இவர்கள் அதைக் கழுவி ஊற்றுகிறேன் என்று
சாக்கடையால் அபிஷேகம் செய்வார்கள் என்று?

கல் தோன்றா மண் தோன்றாக்
காலத்திற்கும் முன்பே
"ஃபாஸ்ஸில்" ஏடுகளில்
இருந்த நம் தொன்மை வரிகள்
காட்டும் வெளிச்சங்களில்
இல்லாத ஒளி மண்டலங்களா?


இன்னும் நான் என்ன‌
சோப்புக்குமிழிகளை ஊதிக்கொண்டிருப்பது?

போதும்!போதும்!
அந்த வெற்றுக்காகிதத்தை
நாலாய் மடித்து வைத்துவிட்டேன்.

====================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக