ஒரு மனிதனின் வாழ்க்கைப்புத்தகத்தில் எல்லாப்பக்கங்களிலும் எழுதப்படாத எழுத்துகளாய் ஊர்ந்து கொண்டிருப்பவர்கள் அவனது நண்பர்களே. அப்படியொரு இனிய என் அன்புத்தோழர் ஒருவரின் மறைவுச்செய்தி அறிந்து மனம் கசிந்த வரிகளே இக்கவிதை.நான் பணிபுரிந்த ஆயுள் காப்பீட்டுக்கழக அலுவலகத்தில் என்னுடன் பணியாற்றிய மதுரை நண்பர் இவர்.
என் அன்பான அஞ்சலிகள்!
=====================================ருத்ரா இ.பரமசிவன்
தோழர் ராஜகுணசேகர் அவர்களின்
மறைவு செய்தி ஒரு தின இதழில்
அவர் ஃபோட்டோவை கட்டம் கட்டி
நம் மனங்களை
கண்ணீர்ச்சிறைக்குள் தள்ளி விட்டது.
புன்னகையும் சிரிப்புமாய்
சித்தாந்தங்களை நம்மிடையே
சித்திரம் ஆக்கியவர்.
மானுடம் ஒற்றைப்புள்ளியல்ல.
மில்லியன் மில்லியன் புள்ளிகள் கோத்த
மகத்தான உயிர்ப்பான
சமூக ஓவியம் அல்லவா?
அந்த கருத்தின் இழையை
நம்மிடம் நெய்தல் செய்த தோழர் அவர்!
பொதுமையும் தனித்துவமும்
முரண்பட்டு நிற்பதை
பணங்காய்ச்சி மரமாக்கி
தனித்துவங்களின் அடர்ந்த காட்டில்
மானுட வளர்ச்சியை சிதைப்பது தானே
நவீன பொருளாதாரம்.
பொதுமைப்பொருளாதாரம்
மலர்ச்சியுற
இலட்சியங்களை இன்னும் உயிர்ப்போடு
வைத்துக்கொள்ளும் சக்தியாய்
வரலாற்றுப்பிரக்ஞையுடன் நம்மிடையே
உலா வருவதே "தோழமை" உணர்வு.
அதன் அடையாளமாய்
அதன் உருவகமாய்
அகலாத ஒரு புன்னகையாய்
சுடர்ந்து கொண்டிருக்கும்
தோழர் ராஜகுணசேகர் அவர்களுக்கு
என் அன்பான அஞ்சலிகள்!
========================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக