சுடர் உன் கையில்!
_____________________________________
ருத்ரா
அன்பான இந்தியனுக்குள்
அதையும் விட சிறந்த அன்பான
மனிதன் இருக்கிறான்.
அவன் வெறுப்பால் வார்க்கப்பட்டவன் அல்ல.
அவன் ஒரு வரலாற்று ஈர்ப்பால்
ஒன்றிணைக்கப்பட்டவன்.
அடி கொல்லு அவனை வெட்டு
இப்படி தூண்டிய சொற்களையெல்லாம்
விழுங்கிச்செரித்து
விழுமியங்களுக்காக
முன் வந்தவன்.
மனித உந்துதலின் விசையை
தன் வாழ்க்கையில்
நட்டு வளர்த்துக்கொண்டவன்.
தன்னுடன் வாழும் மனிதஉறவுகளில்
மதத்தின்
கடவுள் சொற்களின்
சாரத்தை தன் ஓர்மையில்
உள் செலுத்திக்கொண்டவன்.
மனிதமும் அறிவும்
அவனுக்குள் ஒளியேற்றியதில்
பிளவு வர்ணங்களின்
இருட்டுகள் யாவும்
சலவை செய்யப்பட்டு நிற்பவன்.
புறவடிவங்களில் அவனுக்கு
ராமனின் வில்லும்
விஷ்ணுவின் சக்கரமும்
அனுமனின் கதாயுதமும்
இன்னும் வினோதமான
எல்லா ஆயுதங்களுமே
வெறும் பொம்மைகளே.
இதற்கு உயிரூட்டி வெறியூட்டி
காலச்சக்கரத்தை
பின்னோக்கிச்சுழற்றவா
இத்தனை சூழ்ச்சிகள் தந்திரங்கள்
பிம்பம் காட்டுகின்றன?
எங்கள் சுதந்திர சாசனத்தை
அந்த பிசாசுகள் பிய்த்து தின்னுவதற்கு
ஒரு பொழுதும் விடமாட்டோம்.
சமூக நீதி எனும் பெருவெளிச்சம்
எங்களிடையே
கனன்று கொண்டிருக்கிறது.
மதத்தின் உச்சியில்
எல்லா கடவுள்களும்
அல்லது
மதங்களின் பெயர்கள் எல்லாம்
கழன்று போன
அந்த நுனியில்
மனித மலர்ச்சியின் புன்னகை
மட்டுமே
மாமிசம் நாறும் அந்த எலும்பு மிச்சங்கள்
இறைந்து கிடக்கும் குகைகளை
திறந்து காட்டி வழி அமைக்கும்.
ஓ!மனிதமே!
உன் பயணம் முற்றுப்பெறவில்லை
காலடியில் இடறும்
பிணக்குவியல்களால்
அச்சம் கொள்ளாதே.
ஆதிக்க வெறி..
இந்த தீயை நீ அணைக்கும் வரை
பயணம் தொடர்.
இடர்கள் களை.
சுடர் உன் கையில்.
இருட்டை
நொறுக்கு....நொறுக்கு
நாகரிகத்தின் உன் உயிரெழுத்துக்களை
தின்னத்துடிக்கும் இந்த
அந்துப்பூச்சிகளை
அழித்தொழி!
_______________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக