செவ்வாய், 11 அக்டோபர், 2022

தமிழுக்கு எப்போதும் தமிழ் என்றே பேர்

தமிழுக்கு எப்போதும் தமிழ் என்றே பேர்

_______________________________________________


 


நம் மொழி

பக்தியா? தமிழா?

பக்தி எனும் செங்கல்லை

உருவி விட்டால்

தமிழ் இல்லை என்று

கதாகாலட்சேபம் செய்துவிட்டு

வந்திருக்கும்

அந்த புலமை பெற்ற தமிழ்ப்பேச்சாளருக்கு

ஒரு கேள்வி?

மேற்கிளையிலிருந்து கொண்டு

அடிக்கிளையை வெட்டும்

அதி மேதாவி அவர்களே.

தமிழ் இல்லாவிட்டால் 

கடவுளே இல்லை.

அப்புறம் 

பக்தி பூஜை தூப தீபம் எல்லாம் ஏது?

அதனால் தான்

சமயக்குரவர்களை

தமிழில் அடியெடுத்துக்கொடுத்து

பாடச்சொல்லியிருக்கிறார்

சிவபெருமான்.

அதே தமிழையும் நக்கீரனையும் 

வைத்து தான்

முதல் நாத்திகக்குரல் எழுப்பியிருக்கிறான்

தமிழன்.

மோசிகீரன் என்றொரு புலவன்

முரசுக்கட்டிலில் படுத்து இருந்ததைக்கண்டு

யாரோ ஒருவனால்

அரசின் இறைமை அவமானப்படுத்தப்பட்டதை 

கண்டு வெகுண்டு

அவரைக் கொல்ல வாளை உருவிய மன்னன்

அவர் தமிழ்ப்புலவர் என்று அறிந்ததும்

கவரி கொண்டு வீசி பணிவிடை

செய்திருக்கிறான்

பக்தி என்றதில் சமஸ்கிருதத்தை

உச்சரித்திருந்தால் 

இந்நேரம் அதுவும் செத்து தான் 

போயிருந்திருக்கும்.

பக்தியிலும் தமிழன் தமிழைத்தான்

பார்த்தான்.

தமிழ் தான் பக்தியை உயிர்ப்பித்து

இருந்திருக்கிறது.

தமிழில் தான் காதலாகிக் கசிந்து

கண்ணீர் மல்கியிருக்கிறான் பக்தன்.

இவன் தமிழில் கண்ணீர் மல்கியதில்

கடவுளின் கற்சிலையும் கண்ணிர் மல்கித்தான்

வேதியனையும் வென்ற‌

"வேடன்"கண்ணப்பனை  நமக்கு 

தரிசனம் காட்டியது.

தமிழிடமிருந்து

நீங்கள் பக்தியை மட்டும் பிரித்துக்காட்டியது

அந்த சிவனுக்கு கேட்டிருந்தால்

அவன் நெற்றிக்கண்ணில் நீங்கள்

பஸ்பமாகி இருப்பீர்கள்.

வாழ்க தமிழ்.

வீழ்க தமிழ்ப்பகை.


______________________________________________

செங்கீரன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக