பொன்னியின் செல்வன்
__________________________________
ருத்ரா
பொன்னியின் செல்வன்
பாதி எழுதியது கல்கி.
மீதி வரைந்தது மணியம்.
வரலாற்றுப்புதினம்
படிக்க படிக்க
பரபரப்பாய் இருந்தது.
வரலாற்றின் படிப்பாக இல்லை.
ஏனெனில்
புதினம் என்ற புனைவில்
சுருட்டப்பட்டு இருந்தது.
அடிப்படையில்
சமணமும் சைவமும் வைணவமும்
தங்களுக்குள்
கழுவேற்றிக்கொண்டு
இருந்தது தான் நிகழ்வுகளின் பின்னணி.
ராஜ ராஜனும் ராஜேந்திர சோழனும்
கடல் கடந்து வெற்றிக்கொடி
நாட்டியது
இந்திய அரசர்களிலேயே எந்த அரசர்களும்
செய்யாதது.
அசோகர் கூட புத்தமதம் பரப்பவே
இலங்கைக்கு தன் மக்களை அனுப்பினார்.
சோழச்சக்கரவர்த்திகளின்
இந்த சிறப்பு வரலாறு
நம் இந்திய வரலாற்றுப்பாடத்தில்
இருட்டடிக்கப்பட்டு விட்டது.
பொன்னியின் செல்வனின் இந்த
புகழ் வெளிச்சத்தை
மறக்கடிக்கவும்
மறைக்கவுமே
நந்தினியும் வந்தியத்தேவனும்
ஆதித்த கரிகாலனின்
கொலைச்சூழ்ச்சியை வைத்துக்கொண்டு
"கொல கொலயா முந்திரிக்கா
நரியே நரியே சுத்திவா"
என்று விளையாடிக்கொண்டிருந்தார்கள்.
அதோடு விடவில்லை
நாற்காலியைப்பிடிக்க
பொன்னியின் செல்வனே இதை
ஏற்பாடு செய்திருப்பானோ
என்ற சந்தேகப்பழியையும்
வலையாக பின்னப்பட்டதே
சுவையையும் விறுவிறுப்பையும்
புதினத்தில் முறுக்கேற்றுவதற்குத்தான்.
கதை என்றால் அப்படித்தான்
இருக்கும் என்கிற பாமர ரசிகர்களாய்த்
தமிழர்கள் தடம் புரள வீழ்ந்து கிடந்தார்கள்.
அந்த படுகொலையைச்செய்தவர்களுக்கு
தண்டனையோ
வெறும் நாடு கடத்தலும்
சொத்துகள் பறிமுதலும் தான்.
மற்றவர்கள் செய்திருந்தால் தலைகள்
உருண்டிருக்கும்.
மனு நீதியின் ஆயிரம் ஆண்டுகளுக்கு
முந்திய கோர முகமே அந்த தீர்ப்பு.
இதை வைத்துக்கொண்டு தான்
"இந்து என்று சொல்லடா"
என்று சில கூட்டங்கள் உறுமுகின்றன.
இந்த கூச்சல்களையும் தாண்டி
ராஜ ராஜ சோழன்
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
என்று
இடிக்குரல்கள்
சிலிர்த்து எழுந்து முழங்குகின்றன.
தமிழா!
ஆயிரம்
இரண்டாயிரம் ஆண்டுகளாய்
நீ தொலைந்து கிடந்தாய்
என்பதை
தோரணம் கட்டிக்கொண்டாடுவதற்குத்
தான்
பொன்னியின் செல்வனுக்கு
தலையணை தலையணகளாய்
நாலு ஐந்து பாகங்களில்
காத்துக்கொண்டிருக்கிறாய்.
இவற்றில் நீ
தூங்கிவிடாதே தமிழா!
தூங்கிவிடாதே.
___________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக