அம்மன்கள்
__________________________________________
ருத்ரா
நேர்த்திக்கடன்.
துணி முடிதல்.
அவன் நாசமாகப்போகவேண்டும்.
இவள் கை கால் விளங்காமல்
சாகட்டும்.
என்று ஒரு அம்மன் முன்னே
காகித விண்ணப்பங்கள் சுருட்டப்பட்டு
ஆயிரக்கணக்காய்
வெள்ளைக்கம்பளிப்பூச்சிகள் போல்
மொய்த்துக்கிடக்கின்றன.
இன்னொரு அம்மன் வயிற்றில்
மிளகாய் வற்றலை
அரைத்துப் பூசி
வயிறு எரிய வயிறு எரிய
சாபமிட்டு சாமி ஆடி
வழிபடுகிறார்கள்.
அந்த தெய்வச்சீற்றங்களை
பொருட்படுத்தாமல்
மக்களை சாதிகளின் மந்தைகள் ஆக்கி
தங்கள் இனம் மறந்து மொழி மறந்து
வாரி இறைந்த ஈசல் குப்பைகளாய்
சிதறிக்கிடக்க வைத்திருக்கிறார்களே
இதன் மீது கொப்பளிக்கின்ற
எரிமலைக்கோபங்களை
எங்கே கொட்டுவது?
ஆத்தாவுக்கு
இதை கற்பூரம் கொளுத்திக்காட்டும்
கைகள் எங்கே போயின?
அந்த அம்மன் முன்னே
இந்த அம்மன்கள் இன்னும்
இமை உரிக்க வில்லையே.
விழி திறக்க வில்லையே!
இப்படியெல்லாம்
மனித அவலங்களின்
நியாய அநியாயக்குரல்களுக்கு
தீர்ப்புகள்
அந்த அம்மனின் தொங்கும் நாக்கிலும்
முண்டக்கண்ணிலுமே
இருக்கின்றன
என்று உண்மையாகவே நம்புகிறார்கள்.
பொய்மைகள் அழுத்தமாய்
கல்வெட்டு உண்மைகளாய்
ஆகிப்போயினவே!
எல்லா நீதிமன்றங்களும்
விறைத்த பார்வையுடன்
வானத்தையே நோக்குகின்றன.
வழக்குகளின் கூச்சல்கள் மட்டும்
கேட்டுக்கொண்டே இருக்கின்றன.
______________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக