கல்லிலே சிரித்து நிற்பான்
_______________________________________________
ருத்ரா
கல்லிலே சிரித்து நிற்பான்
பளிங்கிலும் புன்னகை தான்.
வெறும் வெளியிலும்
பெரியதோர் வெறுமையைக்
காட்டி நிற்பான்.
பூதமும் அவன் தான்.
புழுவும் அவன் தான்.
இருப்பது என்று காட்டியே
இல்லை என்று கைவிரிப்பான்.
இதுவும் அதுவென்பான்
அதுவும் இதுவென்பான்.
இலக்கணங்கள் உடைத்ததிலே
இலக்கியம் ஆகிடுவான்.
எங்கே இருந்தால் என்ன?
எப்படி இருந்தால் என்ன?
வேண்டும் என்றால் தொழுது காட்டு.
வேண்டாம் என்றால் வெறுங்கை காட்டு.
மறுத்துப்பேசுவது பாவம் அல்ல.
ஒப்புக்கொள்வது புண்ணியமும் அல்ல.
கண்ணாடி முன்னால் உன்னைப்பார்.
உனக்கு உன்னை தெரியாமல் போனால்
உள்ளப்பிரளயம் நீ புகுந்து விட்டாய்.
உன் மீசையும் முறுக்கும் அதில் தெரிந்தால்
உனக்கு உள்ளச்சுவடு எதுவுமில்லை.
உன் உள்ளம் முறுக்கிப்பிழிகின்ற
ட்ரெட் மில் கூடமே உன் கோயில்.
பயிற்சி செய்து கொண்டே இரு.
அடுத்தவன் வலியுடன் தன்னையும் சேர்த்து
தைத்துக்கொள்பவனே கடவுள் இங்கு!
அவ்வலி போக்குதல் அறப்பணியாம்.
அழிப்பதே முதல் வேலை என்பான்
இரக்கம் அற்ற அரக்கன் ஆவான்.
அவனை வதம் செய்ய இங்கு
ஆயிரம் தீபாவளிகள் போதாது.
நத்தைப்புழுவாய் நசுங்கியவன் மீதா
சங்கு சக்கரம் மழுவாயுதம்
மூர்க்கம் எல்லாம் காட்டுவது?
சாஸ்திரங்கள் வெறும் மேலுறை தான்.
உள்ளுறை என்பது மானிட ஓர்மை.
உள்ளே இருப்பதை அழியவிட்டு
உண்மை அழிய விடலாமா?
மேலுறை காத்தால் போதுமென்று
உட்பொருளை வெறும் சவமாக்கி
சப்பரங்கள் ஊர்வலம் விடலாமா?
சிந்திப்பீர்! உளம் செதுக்கிடுவீர்!
______________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக