ஞாயிறு, 30 அக்டோபர், 2022

ஓவியன்

 


ஓவியன்

________________________________

ருத்ரா



உன் மீதே ஒரு ஓவியம் வரை.

உன் உள்ளக்கீறல்களை

தூரிகையாக்கு.

உன் இதயக்குப்பியிலிருந்து

உணர்ச்சிப்பெருக்குகளை

குபீர் குபீர் என்று

பிதுக்கித்தள்ளும் குழம்பினை

வண்ணங்களாக்கு.

இயற்கையோ

மனித முகங்களோ

பெண்மைப்பேரழகின் 

பெருந்தக்க முருகியல் சுழிப்புகளோ

இன்னும்

பட்டாம்பூச்சியின் துடிக்கும் 

சிறகுகளிலேயே

நெளிவுகள் காட்டும் 

திரைகளையோ

வரை..வரை வரை.

உன் தீட்டல்களுக்கு

எந்த சாஸ்திரங்களும்

தீட்டுகள் கற்பிக்க முடியாது.

அவர்கள் கூப்பாடு போடும்

பிரம்மத்தின் பிழம்பு அல்லவா

அந்த தூரிகை மயிர் விளிம்பில்

துளிர்த்து துளிர்த்து வருடுகிறது.

உன் சோகமே 

உன் ஓவியத்தை

சொர்க்கமாக்கும்.

வலிக்கும் நரம்பின் ஆற்றோட்டங்களை

அங்குலம் அங்குலமாய்

அந்த படுதாவில்

கொஞ்சம் படுக்க வை.

அந்த கண்கள் அற்ற கண்களான‌

கனவுப்பிழியல்களின்

கண்ணீர்ப்பளிங்கில் உன்

கதைகள் எழுது.

ஓவியனுக்குள்

கோடி கோடி ஓவியங்கள்

அச்சிடப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

அவன் எண்ணத்தின் அகன்றகூடம்

இதோ ஒரு

மியூசியமாய்

விரிந்து கொண்டே இருக்கிறது.

நுழைவோம் வாருங்கள்.

அனுமதிச்சீட்டு ஏதுமில்லை.

அவன் இன்ப துன்பங்கள்

ஒரு மௌனத்தில் அங்கே 

பகிர்ந்து கொள்ளப்படுவதே

அவனுக்கு

ஒரு பாக்ஸ் ஆபீஸ் வசூல்.


___________________________________

 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக