திங்கள், 31 அக்டோபர், 2022

என்ன செய்யப்போகிறாய் தமிழா?

 என்ன செய்யப்போகிறாய் தமிழா?

______________________________________

செங்கீரன்



வரலாறு என்று

சொல்லி சொல்லி 

உன் எழுத்துக்களை 

அழகு பார்த்துக்கொண்டிருக்கும் 

தமிழனே!

ஈக்கள் மொய்த்துக்கொண்டிருப்பது 

போல் தான்

அந்த எழுத்துக்கள் கொத்து கொத்தாக‌

சிதறிக்கிடக்கின்றன.

எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும்

உன் அகமும் புறமும் காட்டுகின்றன

என்று 

அவை பல்கலைக்கழகக் கட்டிடங்களின்

நூலாம்படைத்தொட்டில்களில்

உறங்கிக்கொண்டிருக்கின்றன.

அந்த சொற்கள் எல்லாம் 

மின்னல் பூசி 

சுடர் தெறித்துக்கொண்டிருப்பதை

என்றாவது

உணர்ந்து ஓர்மை கொண்டிருக்கிறாயா?

உன் மீது 

சமஸ்கிருதச்சப்பாத்திக்கள்ளிகள்

மூடிக்கிடப்பதையாவது

கண்டு கொண்டாயா?

குழலினிது யாழினிது என்ப தம் மக்கள்

மழலைச்சொல் கேளாதவர்

என்றானே வள்ளுவன்.

உன் குழந்தைகளை 

ஈன்ற உடனேயே ஏதோ 

ஓலைப்பாயில் வைத்து சுற்றுவதைப்பொல்

வடமொழி கொண்டு தானே

போர்த்திக்கொண்டிருக்கிறாய்.

நாளை உன் பேரனுக்கு பேரன்

தமிழ்ப்பெயர் இழந்து

"ஆரியக்குஞ்சு"களின் பெயர் பொறித்து

அல்லவா வலம் வருவான்.

அவன் என்ன 

ஆரியப்படை கடந்த பாண்டியன் 

நெடுஞ்செழியனையா

அடையாளம் காட்டப்போகிறான்?

தமிழனை

இன்றே இப்படி வேதமொழிக்குள்

புதைத்து விட்ட பிறகு

"தமிழன் என்று சொல்லடா

தலை நிமிர்ந்து நில்லடா"

என்று நிமிர்ந்து முழங்க

உனக்கு 

தலையும் இல்லை

தமிழ்க்குரலும் இல்லை.

என்ன செய்யப்போகிறாய் தமிழா?



_______________________________________________



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக