ஞாயிறு, 30 அக்டோபர், 2022

இருட்டிலிருந்து தவளைச்சத்தங்கள்.


இருட்டிலிருந்து தவளைச்சத்தங்கள்.

_______________________________________

ருத்ரா



இருட்டு முன் வீடு போய்ச்சேர்.

இந்த இருட்டு உன்னை என்ன செய்யும்

என்று

சொல்லவே முடியாது.

ஏற்கனவே 

அரைப்பார்வை குறைப்பார்வை 

உனக்கு இருந்தால்

இப்போது நீ இந்த உலகப்பிடிப்பிலிருந்து

நழுவி ஒரு

படுகுழியில் விழுந்து விட்டதாய்

கிடத்தப்படுவாய்.

ராமாவைக்கூப்பிடு.

கிருஷ்ணாவைக்கூப்பிடு.

அவர்கள்

உன் கர்மா அக்கௌண்டை

சரி பார் என்பார்கள்.

பிறவிச்சங்கிலி உனக்குத்தேவையா

என்பார்கள்.

அறுத்துவிட்டு வா

என்பார்கள்.

இருட்டே ஒரு வெளிச்சத்தை

பிரசவிக்கும் ஆச்சரியம் தானே

இந்த மனிதம்.

மனிதமாவது?மண்ணாங்கட்டியாவது?

மோட்ச ராஜ்யம் 

வைகுண்ட ப்ராப்தி

இதெல்லாம் வேண்டாமா?

இன்னும் என்னவெல்லாமொ

ஸ்லோகங்கள் உமிழப்படுகின்றன.

இருட்டு விரட்டுகிறது.

வெளிச்சத்தை தேடிக்கொள் என்று.

கடவுள் எங்கள் எச்சில் மந்திரங்களில்

தான் ஜனிக்கிறார்  

என்று வைதிகம் கொக்கரிக்கிறது.

மறைக்கப்பட்ட சொற்களின்

மங்கலான ஒலிகள் மட்டுமே

உங்களுக்கு கிடைக்கும்.

இருட்டில் மறைந்து கொண்டா

பகவானுக்கு 

இந்த மந்த ஹாசம்?

உங்களுக்கு இந்த இருட்டு

பழகிப்போய் விடுகிறது.

இப்போது கண்கள் கூட 

உங்களுக்கு தேவையில்லை.

ஏன்

சிந்தனை எண்ணம் என்பவை கூட‌

உங்களுக்கு கெட்ட வார்த்தைகள்.

இந்த இருட்டு

அவர்கள் உங்கள் மீது பூசிய‌

வர்ணங்களைக் கூட காட்டுவதில்லை.

உங்களை 

அவர்ணத்தார் என்று

இந்த மை இருட்டுக்குள் 

வீழ்த்தியிருக்கிறார்கள்.

வரலாற்றை அவர்களிடம் தொலைத்துவிட்டு

வரலாற்றுக்குருடு ஆகிப்போன‌

உங்களுக்கு 

கூழ்ப்பூச்சிகளான இந்த மரவட்டைகள் கூட‌

அவதாரங்கள் தான்.

இருட்டையே கண்கள் ஆக்கி

இந்த உலகை நீங்கள் படித்து

தட்டுத்தடுமாறி எழுந்த போதும் கூட‌

சூத்திரன் என்ற‌

கனமான பாறாங்கல்லை

உங்கள் மீது ஏற்றி 

அழுத்திக்கொண்டே இருப்பார்கள்.

ஏதோ ஒரு

வேதப்பிரகாசத்தில் இருப்பதாக‌

தம்மைத்தாமே 

அவர்கள் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் 

மனிதம் மறுத்த ஒரு 

பேய் இருட்டில் 

புரண்டு கொண்டிருக்கிறார்கள்.


அதை எப்படி

கண்டு பிடித்தீர்கள்?


வெள்ளைக்காரன் சொல்லிக்கொடுத்த‌

இங்கிலீஷை அதன் மீது 

ஒற்றித்தான் கண்டு பிடித்தோம்.


"அசதோ மாம் சத் கமய‌

தமசோ மாம் ஜ்யோதிர் கமய"


பொய்யர்களான நாங்கள் 

மெய்யர்கள் ஆகவேண்டும்.

இருண்டு கிடப்பவர்களான‌

நாங்கள் வெளிச்சம் பெறவேண்டும்.


இத்தனை ஆயிரம் ஆண்டுகளாய்

இருட்டில் கிடப்பவர்கள் அவர்களே.

பொய்களை புளுகுபவர்களும் அவர்களே.

மற்றவர்களான சூத்திரர்களுக்கு எல்லாம்

இது சொல்லப்பட‌ வில்லை 

என்று இரைச்சல் இட்டுக்கொண்டிருந்தவர்கள்

அவர்கள் தானே.


______________________________________________________________



















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக