திங்கள், 10 அக்டோபர், 2022

நாவல்களின் நாயகர்

 நாவல்களின் நாயகர்

________________________________________

ருத்ரா



அம்பதுகளில்

டாக்டர் மு வ அவர்களின் நாவல்கள்

பற்றி

ஒலிக்காத வாய்கள் இல்லை.

நினைக்காத தமிழ் நெஞ்சுகள் இல்லை.

தூய தெள்ளிய நடையில்

அந்த நாவல்கள் நகரும் போது

தமிழ்ப்பூக்களின் ஓடைகள் போல‌

சலசலக்கும்.

நம் சிந்தனைகளில் அருவிகளாய்

பின்னணி இசைக்கும்.


கரித்துண்டு

டாக்டர் அல்லி

கள்ளோ காவியமோ

கயமை

மண்குடிசை...

இவை ஒவ்வொன்றும்

எழுத்துக்களின் செங்கல் சிமிண்டு கருங்கல்

கொண்டு கட்டப்பட்ட‌

புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள்.

தமிழ் இலக்கியம் 

சுடர் பூக்க வைத்தவர்.

மற்ற இலக்கியவாதிகளினின்று

வேறு பட்டு நின்று

நமக்கு ஒரு புதிய வெளிச்சம்

காட்டியவர்.

சமுதாய முரண்களை

மயிற்பீலி கொண்டு வருடுபவர்களிடையே..

ரத்தக்களறி கொண்டு

தூரிகை தீட்டியவர்களிடையே...

தமிழ்ப்பகைமையை

ஊதுபத்திப்புகைபோல்

தமிழைக்கொண்டே எழுதிக்காட்டி

வித்தை காட்டியவர்களிடையே...

எழுத்துக்குள் வெறும்

ஃப்ராய்டிசத்தை மதுவாய் பாய்ச்சி

நரம்பு புடைக்க வைத்தவர்களிடையே...

தமிழுக்கும் அல்ல தமிழுக்கு மட்டுமே

அமுது என்று சொல்லும்படி

உயிர்ப்பான செழிப்பான தமிழை

தமிழர்களுக்கு காட்டியவர்.

தமிழை ஒலித்துக்காட்டி

சிகரம் நின்ற அறிஞர் அண்ணா போல்

தமிழை எழுதிக்காட்டி

எழுச்சி காட்டிய 

தமிழ்ப்பெரும் எழுத்தாளர்

டாகர் மு வ.

ஓங்குக அவர் புகழ்!


___________________________________________________








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக