புத்தகத்திருவிழா
______________________
ருத்ரா
இத்தனை காலமாய்
இருண்டு கிடந்து வீட்டுக்கு
இப்போதெல்லாம் பாருங்கள்
சன்னல்கள் சன்னல்கள்
சன்னல்கள் தான்.
அறிவுப்பிழம்பும்
புனைவுப்பிழம்பும்
கை கோர்த்துக்கொள்கின்றன.
மொழிபெயர்ப்புகளுக்கு
மொழிகள்
இரவல் சட்டைகளாய் இல்லாமல்
இயல்பின் இருப்பை
அப்படியே எழுத்துக்களில்
உயிர்ப்பித்துக்கொண்டு
வருகின்றன.
கணினி அச்சுகள் போல்
எந்திர அச்சுகளும்
எந்திர அச்சுகள் போல்
கணினி அச்சுகளும்
நேர்த்தியின் கலைக்கூடங்களாய்
பொலிகின்றன இந்த
புத்தகக்கடைகள்.
புத்தகத்திருவிழா என்பதால்
எழுத்தாளர்களின்
கற்பனைக்கட்டுமானங்களே
கோயில்கள்.
அவர்களின் புதுப் புது
எழுத்துகளின்
கும்பாபிஷேகங்களே
புத்தகத்திருவிழாக்கள்.
நல்ல புத்தகம்
ஒன்று கொடுங்கள்.
யாரோ ஒருவர் கேட்டார்.
கதையா? கட்டுரையா? என்று
கேட்டார் புத்தக விற்பனையாளர்.
ஏதோ கொடுங்கள் என்றார்.
இவரும்
கைக்குக்கிடைத்த ஒரு புத்தகத்தை
அவரிடம் நீட்டினார்.
அது சோதிடப்புத்தகம்.
"அய்யோ..இதுவா
பக்கத்துக்குப்பக்கம்
என்னை கசாப்பு அல்லவா
செய்து கொண்டிருக்கிறார்கள் இதில்?"
குரல் அட்டகாசமான சிரிப்பொலியாய்க்
கேட்டது.
யாரையும் அங்கே காணோம்.
சார்..சார்..சார்..
விற்பனையாளர்
கூப்பிட்டுக்கொண்டே இருந்தார்.
விசிட்டுக்கு வந்த கடவுள்
ஓடியே போய்விட்டார்.
___________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக