வியாழன், 5 ஆகஸ்ட், 2021

அர்ச்சனை

 அர்ச்சனை

___________________________________ருத்ரா


உன் அர்ச்சனைச்சீட்டையும்

பொருள் புரியா கூச்சலையும்

தூர எறி!

அகர முதல என்று ஆரம்பி.

இந்த விண்ணையும் மண்ணையும் 

தாண்டிச்செல்.

இந்தக்கடல் கூட‌

உன் உடம்பின் உழைப்பின் 

வேர்வை மாதிரி தானே!

அதன் இயற்பியல் பற்றி

விளம்பு.

அதற்குள்ளும் 

உன் கல்பாக்கங்கள்

கண்ணுறங்கிக்கிடக்கிறது

என்று உணர்.

என் முன் உனக்கு 

சிந்தனை கதிர் விரிக்க‌

வேண்டும்.

எனக்கு ஏற்படுத்திய‌

இந்த அட்டைக்குடும்பத்தை

தட்டி யெறி.

எனக்கு உடம்பு கொள்ளாமல்

பொண்டாட்டிகளாம்.

எனக்கும் என் ஆனைக்குட்டிப்பிள்ளைக்கும்

இன்னும் ஆறு தலை முளைத்த 

அருமந்த செல்வனுக்கும்

நீ நம ஓம் நம ஓம்

என்று சொல்லிக்கொண்டிருப்பதாய்

இந்த தவளைகள் 

இரைச்சல் இட்டுக்கொண்டே

இருக்கின்றன.

இந்த மந்திரக்குப்பைகளை 

தூர எறி.

நீ உன் சிந்தனையை

நீ உன் அறிவை 

கூர் தீட்டும்

இடமாக இது இருக்கட்டும்.

சரி 

இன்றிலிருந்து உன் மூளையை

சாணை தீட்டு.

ஒரு பெரிய வெடி வெடித்த‌

ஆற்றல்களின் 

மிச்ச சொச்சங்கள் தானே

இந்த "அண்டம்".

அப்படியென்றால்

அந்த திரியைப் பற்றவைத்தது

யார்?

அதற்கு முன் அதன்

நிலை என்ன?

எல்லாமே நீ தான்.

உன் மூளையில் தானே

இப்படியெல்லாம் உதிக்கிறது.

மனிதனே!

தினம் தினம் 

சூரியன் அந்த கிழக்கு விளிம்பிலா

உதிக்கிறது?

இல்லை!இல்லை!!

உன் மூளையின் மலை மடிப்புகளிலிருந்து

தினமும் 

வெளிச்சம் பரவுகின்றது.

அது தான் சொல்கிறது

"ப்ளாங்க்" என்பவன் கண்டுபிடித்த‌

மாறிலி எனும் பரம்பொருளை.

அது விண்டு விண்டு விளக்குகிறது.

என்னைப்பற்றி

புராணங்கள் புளுகியது போதும்.

அதன் அடிச்சிந்தனையில்

தேறும் அறிவு ஒளியின் செதில்களை

சேகரிக்க முயல்.

கடவுளே.

என்ன இது?

நான் உன்னைப்பாடுவதற்குப்பதில்

நீ என்னைப்பாட ஆரம்பிக்கிறாய்?

அந்தக்குரல் தொடர்கிறது.

போதும் 

இந்த வவ்வால் புழுக்கைகளின் 

நாற்றம் தாங்க முடியவில்லை.

இந்த கோவில்களை

நூலகம் ஆக்கு.

தேக்கம் அடைந்து அந்த‌

நூலாம்படை நூல்களை

மார்பில் அணிந்து கொண்டா

இன்னும் வாந்தி யெடுக்கப்போகிறாய்?

இந்த "கல்" கூடங்களே

இனி எதிரொலிக்கட்டும்

கல் கல் என்று.

ஆம்! இவை

உன் பல்கலைக்கழகங்கள்.

காலமும் வெளியும்

இந்த பிரபஞ்சத்தின் புழக்கடையில்

சுழியங்களாய் தொலைந்து போயிருக்கின்றன‌

என்று இயற்பியல் ஞானம் கூறுவதை

இங்கு வந்து பட்டைதீட்டிப் படித்து அறி.

கருந்துளை எனும் 

அந்த முற்றுப்புள்ளியிலிருந்து கூட‌

அறிவுத்திறளின் ஆற்றல் கதிர்வீச்சு

(ஹாக்கிங் ரேடியேஷன்) 

முளை விடுகிறதாய் முனைப்பு காட்டும்

அந்த கல்வியில் கரு உறு!

வெறும்

பிறப்பால் பிரம்மனின்

கொம்பு முளைத்திருப்பதாய்

ஆதிக்கம் செலுத்தும் 

சூழ்ச்சிகளையெல்லாம்

முறியடித்து

அந்த கொட்டு மேளங்களை முழக்கு!


___________________________________________





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக