ஒரு பொழிப்புரை
===================
ஒள்ளிய மௌவல் நிரைத்தன்ன
___________________________________கல்லிடைக்கீரன்
(ஓலைத்துடிப்புகள் 107)
சீறிலை அங்கொடி அணியிழைக் கூந்தல்
அலமரல் எழுதகை உருகெழு செத்து
இருபால் குழன்ற சுரியல் தழீஇய
மெல்பூங்காற்றின் அணுக்கம் சிவணிய
வருத்தம் நோன்று ஓங்கல் நாடன்
ஒள்ளிய மௌவல் நிரைத்தன்ன எயிற்றன்
முறுவல் கொய்து மாய்ந்தே மடுக்கும்.
புலம்பு இறை கொள்ளும் வரிமணல் மயிரிய
தொடியும் வீழ்தரு துன்பம் பொருதனள்.
உழுவை குத்தினன் வீறு கொள் நடுகல்
குறிசெய்தான் செய்தி அவிழ்த்த தோழி
செந்தழல் பூசி நாணிய செய்தாள்
எல்லினன் நுங்கிய பெருங்கல் நத்தம்
குருதி சொரிந்தன பேஎய் வீக்கள் போன்ம்.
மாலையும் மடிந்தது வெரூஉய் தந்து.
_____________________________________________
இது எனது சங்கநடை செய்யுட் கவிதை
"கல்லிடைக்கீரன்"
_______________________________________________
பொழிப்புரை
__________________________________கல்லிடைக்கீரன்
சீறிலை அங்கொடி அணியிழைக் கூந்தல்
அலமரல் எழுதகை உருகெழு செத்து
இருபால் குழன்ற சுரியல் தழீஇய
சிறிய இலைகளுடன் கூடிய அந்தக்கொடி தலைவியின் கூந்தல் எழுந்து எழுந்து வீசி ஒரு தோற்றம் தந்ததைப் போல இருந்தது.(செத்து = போல இருந்தது) அது இருபக்கமும் குழைந்து சுருண்டு (குழன்ற சுரிய) அவளைத்தழுவி விழுந்து கிடந்தது.
மெல்பூங்காற்றின் அணுக்கம் சிவணிய
வருத்தம் நோன்று ஓங்கல் நாடன்
ஒள்ளிய மௌவல் நிரைத்தன்ன எயிற்றன்
முறுவல் கொய்து மாய்ந்தே மடுக்கும்.
புலம்பு இறை கொள்ளும் வரிமணல் மயிரிய
தொடியும் வீழ்தரு துன்பம் பொருதனள்.
உழுவை குத்தினன் வீறு கொள் நடுகல்
குறிசெய்தான் செய்தி அவிழ்த்த தோழி
செந்தழல் பூசி நாணிய செய்தாள்
எல்லினன் நுங்கிய பெருங்கல் நத்தம்
மெல்லிய தென்றல் அவளை மிக நெருக்கத்துடன் பொருந்தி தலைவனைப் பிரிந்த துயரத்தை வெளிப்பத்துமாறு அந்த மலை நாட்டுத் தலைவன் ஒளிபொருந்திய "வரிசையாய் அமைந்த சிறிய வெள்ளைப்பூக்கள் ஒத்த பற்களை உடையவனாக (மௌவல் நிரைத்தன்ன எயிற்றன்) இருந்தான்.அவன் புன்முறுவல் செய்து செய்து அவளையே கொய்து விடுவான் போல் இருக்கிறது.உற்றுக்கேட்டால் அந்த சிற்றொலி கூட மறைந்து நின்று ஒலிக்கும் என்பது போல் இருக்கிறது தலைவிக்கு .கொடி கொம்பு இல்லாமல் ஒரு மலர்க்கொடி அங்கும் இங்கும் தள்ளாடுவது போல (புலம்பு என்ற சொல் அதை குறிக்கிறது.புலம்பு என்றால் அக்கொம்பையும் சேர்த்து கொடியும் கொம்பும் தள்ளாடுவதைகுறிக்கும்) அவளது முன் கை (இறை) தடுமாறுகிறது. மெல்லிய மணல் வரி போல் படர்ந்திருக்கும் அழகிய மயிர் படர்ந்த அவள் முன் கையில் அணிந்த வளைகள் நெகிழ்ந்து வீழும் துன்பத்தோடு போராடுகிறாள். அப்போது அவள் தோழி "புலி குத்தி"எனும் நடுகல் அருகே (புலியோடு போராடிய வீரனின் நடுகல்) தலைவன் அவளை சந்திக்க இருப்பதாக வரும் செய்தி(குறி) பற்றி குறிப்பிடுகிறாள்.அப்போது அவள் அடைந்த நாணம் இருக்கிறதே!அது ஒரு அரிய காட்சி.தோழி சொன்னது அவள் மீது நெருப்பு போன்ற செந்நிறத்தைப்பூசியது. எல்லினன் (மாலைச்சூரியனை) நுங்கிய (விழுங்கிய) பெருங்கல் அத்தம (பெரிய மலையின் அந்த எல்லையோரம்)
குருதி சொரிந்தன பேஎய் வீக்கள் போன்ம்.
மாலையும் மடிந்தது வெரூஉய் தந்து.
ரத்தம் பீறிட்டது போலும் அச்சம் தரும் வகையில் சிறிய சிறிய சிவப்புப்பூக்கள் சிதறிய காட்சி போலும் இருந்தது.அந்த அச்சத்தால் அந்தி வேளையும் துயில் கொள்ளப்போய் விட்டது.
_______________________________________________________________
நான் பொதுவாக சங்கத்தமிழ்ச்செய்யுட்களை புரட்டி வாசிக்கும்போது பொருள் செறிந்த சொற்களில் புதியனவாய் தோன்றும் சொற்களை தேடித் தேடி படிப்பேன். அப்படி படிப்பது அந்தச் செறிவுத்தன்மையை உள் நோக்கி காணச்செய்யும்.அது ஒரு
வகை இலக்கிய இன்பம்.அகநானூறு 21 ல் "காவன் முல்லைப்பூதனார்" (பாலைத்திணை) பயன் படுத்திய "மௌவல்" "நிரைத்தன்ன" "சுரியல்" மற்றும் "புலம்ப" என்ற சொற்கள் எனக்கு மிகவும் ஆழ்ந்த பொருளைத் தந்தனவாகத் தோன்றின.அவற்றைத்தான் இச்செய்ளில் பயன் படுத்தி உள்ளேன்.
வழக்கமாய் அப்படி ஓரிரு சொற்களை மட்டும் எடுத்துக்கொண்டு என்
முழுச்செய்யுட் கவிதையை எழுதுவேன் அல்லது ஒரு குறிப்பிட்ட "வரியை" மட்டும் எடுத்து "தலைப்பு" ஆக்கி என் முழுச்செய்யுளை அமைப்பேன். சங்கச்செய்யுளின் ஒவ்வொரு சொல்லும் மிக மிக அழமும் அழகும் நுட்பமும் கொண்டவை. அதன்சிறப்பே என்னை இப்படி ஈர்த்துள்ளது.
______________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக