ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

என்ன இல்லை இந்த திருநாட்டில்?



என்ன இல்லை  

இந்த திருநாட்டில்?

ஏன் இப்படி இந்த‌

இந்திய புத்திரர்கள்

ரோட்டோரங்களில்

கொசுக்களோடு ஈக்களோடு

மாட்டுச்சாணத்தோடு

மல்லாந்து கிடக்கவேண்டும்?

ஜெயஸ்ரீராமனோடு ராமனாக‌

தைக்கப்ப்ட்டு

கந்தல் துணிகளாய்

நைந்து கிடக்கவேண்டும்?

விவசாயிகள்

ஒரு புதிய உண்மையை அல்லவா

பஞ்சாப் டெல்லி வீதிகளில்

நாற்றுப்பாவிக்கொண்டு இருக்கிறார்கள்!

இந்த மானிடத்தின் எரிசக்தி

எத்தனை ஆயிரம் எரிமலைகளுக்கும் கூட‌

பெட்ரோல் பெய்யுமே?

அப்படியும்

ஏன் இந்த நீண்ட அமையதியான‌

போர்ச்சத்தத்தின்

ஊதுகுழலை

அந்த விடியலை ஏந்திய‌

எக்காளமாக்கிக்கொண்டிருக்கிறார்கள்?

சன்னமான குரலில் ஒலியெழுப்பி

சன்னலை திறந்து கொண்டிருக்கிறார்கள்?

போலித்தேசியத்துக்கு 

பொய்யாய் 

ஒரு அக்மார்க் முத்திரை

குத்திக்கொண்டு

அந்த பணமூட்டைகள்

நம் கோதுமை மணிகள் மூலமாய்

நம் கரும்புக்காடுகள் மூலமாய்

நம் மிளகாய்ச்செடிகளின் கொத்துக்களில்

டாலர்களை அள்ளும் கனவுகளோடு

இந்த சமுதாய சமநீதி தாகத்தை

அவித்துவிடவே பார்க்கிறார்கள்.

அவர்கள் பை நிறைய‌

பீரங்கிகள்

ரஃபேல் விமானங்கள்

இன்னும் எல்லாம்.

பிதுங்கி வழிகின்றன.

இந்த மனிதப்பூச்சிகள் நசுக்கப்பட‌

சாதி மத புராண அரிதாரங்கள்

மட்டும் போதும்.

ஆனாலும் 

இந்த வயல்காட்டு புத்திரர்களின்

ஏர்கலப்பைகள் கூட‌

அவர்களை 

கதி கலங்கச்செய்கிறது.

அதற்குள் ஆயிரம் ஆயிரமாய்

விஷ்ணுவின் வஜ்ராயுதங்களின்

விதைகள் தூவப்பட்ட்டிருக்குமோ

என்று.

நானா சாகிப்

தாந்த்யா தோபே

லாலா லஜபத் ராய் மற்றும்

பகத்சிங் தோழர்களின்

மிச்ச சொச்ச‌

விடியல் வானங்களின்

அக்கினிக் கீற்றுகள்

அந்த வயற்காட்டின் சதுப்புக்குள்ளிருந்து

முளைத்து வந்து விடுமோ என்று?

மீண்டும்

நம் இதயத்தின் ரத்த நங்கூரத்தின்

அடி நுனியிலிருந்து

பாடுவோம்

"என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?"

__________________________________________________

ருத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக