https://www.youtube.com/watch?v=91PjBulmDQg
குடமுருட்டி சங்கரன்கோவில்
_____________________________________ருத்ரா
பாயும் அந்த வைரத்திவலைகளில்
எனது பத்து வயதுகளும்
பதினொன்று வயதுகளும்
கோலி விளையாடுகின்றன.
அம்மாவின் இடுப்புச்சட்டியில்
கமகமக்கும் கூட்டாஞ்சோறு.
கால்கள் அளைய அளைய
என் தம்பியும் நானும்
அந்த தாம்பிரபரணியின்
முதுகில் சவாரி செய்வது போல்
அந்த கல் அடுக்கு பாலத்தில்
நடப்போம்.
தூரத்து வைராவிகுளத்தின்
மரக்கூட்டங்களும் வெள்ளைநாரைகளும்
எங்களுக்கு காட்சி இன்பம்
பருகக் கொடுத்தன.
மணிமுத்தாறும் பொருநையும்
சங்கமிக்கும் "சங்கத்தமிழ்"
ஓலைப்பாட்டுகள்
சல சலவென்று
இதயங்களில்
"களங்கனி அன்ன கருங்கோட்டுச்சீறியாழை"
(கபிலர் பாடல் 145 புறநானூறு)
சிலிர்த்துக்கொண்டு ஓடுகிறது.
வெறுமையாய்ச்சுருண்டு
அந்த நாட்களை
அதோ தூர எறிந்து விட்ட
அந்த பற்பசைகுழாயிலிருந்து
மீண்டும் பிதுக்கி எடுக்கமுடியுமா என்ன?
பருக்கைக்கற்களின் சரசரப்பில்
அந்தக்காலம் முணுமுணுக்கிறது.
கால் சட்டைகளின் சுவடுகளில் கூட
கனமான சரித்திரங்கள் தான்.
___________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக