காதல் இனிது
_____________________
24.05.2015
எழுதிப்பார்த்தேன்.
காகிதம் இனித்தது.
எறும்பு மொய்த்தது
பேனா நிப்பில்.
ஊதிவிட்டேன்
காற்றின் அணுக்களில்.
காதல் மகரந்தம்
உயிர்த்தது தெரியும்
மண்ணாங்கட்டியும்
பிருந்தாவனங்கள்!
அருகம்புல்லிலும்
ஆதாம் ஏவாள்.
நிலவையும் உரசி
தீப்பொறி உதிர
திங்கள் இங்கே
ஞாயிறு ஆனது.
பொன் பூசிய
அட்டைகள் குவியும்.
இதய மேடுகள்
எழுத்துகள் நிரடும்.
அவளை நினைத்த
அவளில் நனைத்த
அஞ்சல் தலைகளில்
ஆயிரம் தடவை
ஆயிரம் நாவு.
தேனில் ஊறிய
நிமிடங்கள்.
பஞ்சு மிட்டாய்
தருணங்கள்.
வருடங்கள் தோறும்
வருட வந்திடும்
மனதில் ஆயிரம்
மயிற் பீலிகள்.
வேலன்டைன்
வேட்டையின்
காகித அம்பில்
சிக்குமா அது?
"ஐ லவ் யூ டா.."
அலைவிரிக்கும்
சொல்லில் ஆயிரம்
வங்காள விரிகுடா.
கடலின் குமிழியாய்
சூரியன்
எழுவதும் வதும்
காதலின் மூச்சுகள்.
காதல் கடலின்
பாய்மரம்
கரை தட்டும் வரை
காற்றே உணவு.
____________________________________
கல்லிடைக்கீரன் கவிதைகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக