திங்கள், 9 ஆகஸ்ட், 2021

ஒரு படப்பிடிப்பு

 ஒரு படப்பிடிப்பு

_______________________________

ருத்ரா


வாழ்க்கை என்பதன்

திரைப்படக்கதை

எங்கிருந்தோ 

எழுதப்ப‌ட்டது

எழுதப்படுகிறது

எழுதப்படப்போவது

அப்படித்தானே

நிமிடத்துக்கு நிமிடம்

டிவி சீரியல்களின்

கதை 

கொப்பளிக்கப்படுகிறது.

இங்கு எழுதுவது பேனா அல்ல.

விளம்பரதாரர்களின் தூண்டில்.

இந்த பொருட்களின் சந்தைத்திடலில்

கண்ணீரும் கொலையும் ரத்தமும்

காதலும் கத்தரிக்காயும்

குடும்பங்களோடு பிசையப்பட்டு

பிண்டம் பிடிக்கப்படுகின்றன.

பார்ப்பவர்கள்

எல்லோருடைய ஆசைகளும் அவலங்களும்

உக்கிரங்களும் வக்கிரங்களும்

வர்ணங்களில் தோய்க்கப்பட்ட‌

பிம்பங்கள் ஆகின்றன.

என் இனிய நண்பனே

உன் வாழ்க்கையின் திரைப்படக்கதைக்கு

திரையே ஒரு வெறுமை தான்.

பிம்பங்கள் எனும் நிழல்கள் ஏற்படுத்தும்

காரணம் கூட‌

ஒரு பூஜ்யம் தான்.

ஒரு படப்பிடிப்பின்

அந்த மெகா சீரியல்

ஒரு ஹோலோகிராஃபி எனும்

சூனியத்தின் சித்திரங்கள் தான்.

அதற்கு 

தலைவிதி எனும் பெயரிட்டு

ஆயிரங்கள் அல்ல‌

லட்சங்கள் அல்ல‌

கோடிக்கணக்காய்

ஒவ்வொரு மனித ஆசையின்

மயிர்த்துடிப்புகளில்

"எபிசோடுகள்"

இங்கு ஓடிக்கொண்டிருக்கின்றன.

கண்ணுக்குத்தெரியாத‌

அந்த விளம்பர தாரராய்

கடவுள் இருப்பதாய்

அவரது காமிரா பரிவாரங்களாய்

சமுதாய சாதி மத ஓட்டை ஒழுகல்களும்

ஊழல் ஒழுங்கீனங்களும் 

வெண்கொற்றக்குடையேந்தி 

வருகின்றன.

இந்த சொக்கட்டான் விளையாட்டை

அப்படியே 

கொட்டிக்கவிழ்த்து விடுங்கள்.

இப்போது தெரியும்...

எல்லாம் அம்மணமாய் ஓடுவது.

மானிட வாசனையையே

மானிட அன்பையே 

அதன் சமுதாய சமநீதியையே

கீழே நசுக்கிக்கொண்டு

ஓடும் ஒரு

லாபவெறியின் அனக்கொண்டா பாம்பு

வாய் பிளப்பது நன்றாகத்தெரியும்.

புருடா விடப்பட்டுக்கொண்டிருந்த‌

அரிதாரங்களும் அவதாரங்களும்

சாயமிழந்து போன 

வரலாற்று அவமானங்களும் கூட‌

துல்லியமாய்த் தெரியும்.

"ஆன் லைனில்"கூட‌

அலை அலையாய் வரும் 

ஆக்கிரமிப்புகளில்

நம் சிந்தனைகள் சிதைந்துவிடலாகது.

சமுதாய அறம் கூர்மை கொள்ளட்டும்.

சாதி மதங்களின் ஆதிக்கமே

இங்கு ஒரு பெருங்கோயிலாக 

எழுப்பப்படும் தோற்றங்கள்

வெறும் நுரைக்கோபுரங்களாய்

நொறுக்கப்பட வேண்டும்.

வென்றெடுக்க வேண்டிய 

வருங்கால வெற்றிகளின் 

நம்பிக்கைகளின்

முதுகெலும்புகள் அந்த பாம்புகளால்

கூழாக்கப்படும் முன்

குபுக்கென்று குமுறியெழுங்கள்.

இவர்களின் தந்திர சித்திரங்கள்

கலைந்தொழியட்டும்.

ஒளிபடைத்த கண்ணினராய் இந்த‌

இருட்டு அமைப்புகளை

தவிடு பொடியாக்கி

முன்னேறுங்கள்..ஆம்

முனைப்புடன் முன்னேறுங்கள்


__________________________________________


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக